7 மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 13ல் 12 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி முன்னிலை

* பாஜக கூட்டணிக்கு பின்னடைவு
* ஐக்கிய ஜனதா தளம் 1 இடம்

புதுடெல்லி: 7 மாநிலத்தில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் முடிவில் 12 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில் மட்டும் பாஜக கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை வகிக்கிறது. இது பாஜ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் கட்சியாக உள்ள மத்தியப்பிரதேசம், உத்தரகாண்டில் பாஜக கூட்டணி தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இவற்றில் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் என்.புகேழந்தி உயிரிழந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் எம்எல்ஏ பீமா பாரதி ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கத்தில் பாஜகவின் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு மாறியதால், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் கமலேஷ் ஷா, காங்கிரஸ் எம்எல்ஏவாக மூன்று முறை இருந்தபோதிலும், கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அமர்வாரா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரகாண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ சர்வத் கரீம் அன்சாரி உயிரிழந்ததால், மங்களூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோல் பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் டெஹ்ரா தொகுதி உள்பட மூன்று தொகுதிகளின் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்ததால், அந்த 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் மேற்கண்ட 13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. பிற்பகல் நிலவரப்படி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஜலந்தர் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மொஹிந்தர் பகத், காங்கிரஸ் வேட்பாளர் சுரிந்தர் கவுரை காட்டிலும் 23,000 வாக்குகள் முன்னிலையில் வெற்றியை நோக்கி செல்கிறார்.

பாஜக வேட்பாளர் ஷீத்தல் அங்கூரல் மூன்றாவது இடத்தில் பின்தங்கி உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் டேரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரகாண்டின் பத்ரிநாத் மற்றும் மங்களூர் தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மேற்குவங்கத்தின் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய 4 இடங்களிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பீகாரின் ருபாலி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், மத்தியப் பிரதேசத்தின் அவர்வாரா தொகுதியில் காங்கிரசும், தமிழகத்தின் விக்கிரவாண்டியில் திமுகவும் தொடர்ந்து முன்னிலை வகித்தன. மேற்கண்ட முன்னிலை நிலவர அடிப்படையில் பார்த்தால், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இமாச்சலில் 3, உத்தரகாண்டில் 2, மத்தியபிரதேசத்தில் 1, பஞ்சாப்பில் 1 என 7 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் 4 இடங்களிலும், திமுக தமிழ்நாட்டில் 1 இடத்திலும் என மொத்தம் 12 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. மொத்தமுள்ள 13 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி 12 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை பெற இயலாத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அரசை அமைத்தது. அதே நேரம் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் அதிகப்பட்ச இடங்களை கைப்பற்றியது. மக்களவை தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், இடைத் தேர்தல் முடிவில் மீண்டும் ‘இந்தியா’ கூட்டணியின் கை ஓங்கியுள்ளதால் பாஜக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

Related posts

பள்ளிக்கு சென்றபோது வழிமறித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

தாயை தரக்குறைவாக பேசியதால் தந்தையை அடித்து கொன்ற மகன்: எர்ணாவூரில் பரபரப்பு

தொடர்ந்து 9வது முறையாக குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி மாற்றமில்லை