இந்தியா – இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

ஐதராபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஐதராபாத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் (பிப். 2-6), ராஜ்கோட் (பிப். 15-19), ராஞ்சி (பிப். 23-27) மற்றும் தர்மசாலாவில் (மார்ச் 7-11) அடுத்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், அனுபவ வீரர் விராத் கோஹ்லி சொந்த காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் இருந்து விலகியுள்ளது சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும் இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை, இங்கிலாந்து சவாலுக்கு தயாராகவே உள்ளது. கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.

ஜடேஜா – அஷ்வின் சுழல் கூட்டணி இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும். அதே சமயம், அதிரடி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சம பலத்துடன் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. கேப்டன் ஸ்டோக்ஸ் – பயிற்சியாளர் மெக்கல்லம் இணைந்து வகுத்துள்ள ‘பேஸ்பால்’ அதிரடி வியூகம் இந்திய ஆடுகளங்களில் எடுபடுமா? என்ற கேள்வி இத்தொடர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்குகின்றனர். இளம் ஆஃப் ஸ்பின்னர் சோயிப் பஷிர் விசா குளறுபடி காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து அணி நிர்வாகம் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான். இங்கிலாந்து (முதல் டெஸ்ட்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஓல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜாக் லீச்.

Related posts

ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

பைடன் உளறிக்கொட்டுவதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி? ஜனநாயக கட்சியில் பரபரப்பு திருப்பங்கள்