இந்தியாவுடனான வலுவான உறவால்தான் சீனாவின் தயவில் இருந்து அமெரிக்கா விடுபட முடியும்: அதிபர் பதவிக்கான வேட்பாளர் விவேக் ராமசாமி கணிப்பு

டெஸ் மொயின்ஸ்: இந்தியாவுடனான வலுவான உறவால், சீனாவின் தயவில் இருந்து அமெரிக்கா விடுதலை பெற முடியும்’ என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி கூறி உள்ளார்.அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி உள்ளார். இவர் முதல் முறையாக இந்திய ஊடகமான பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் முக்கிய சவால் என்னவென்றால், நாங்கள் தாய்நாட்டை காக்கவில்லை. அமெரிக்க நலனுக்கு தேவையான விஷயங்களை விட்டுவிட்டு, வேறு விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். உக்ரைன் விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடுவது தவறு. அது எந்த விதத்திலும் தேசத்தின் நலனை காக்கப் போவதில்லை. மாறாக, உலகளவில் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும்.அதே போல, நமது உண்மையான எதிரியான சீனாவை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கவில்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதில் எந்த கட்சியும் கவனம் செலுத்துவதில்லை. இந்த நிலை மாற இந்தியா உடன் வலுவான உறவு அவசியம். இப்போது இந்தியாவுடன் அமெரிக்கா வலுவான உறவை கொண்டுள்ளது. அந்தமான் கடலில் ராணுவ உறவும் உள்ளது.தேவைப்பட்டால் மலாக்கா ஜலசந்தியில் சீனாவை தடுக்க முடியும் என்பதை இந்தியாவும் அறியும். இவ்வழியாகத்தான் மத்திய கிழக்கில் இருந்து அதிக அளவு எண்ணெய்யை சீனா கொண்டு செல்கிறது.

இந்த விஷயங்கள் அமெரிக்கா, இந்தியா உறவின் உண்மையான முன்னேற்றங்களாக இருக்கும்.எனவே, இந்தியா உடனான வலுவான உறவு மூலமாகத்தான் சீனாவின் தயவிலிருந்து அமெரிக்கா விடுதலை பெற முடியும். இதுவே, அமெரிக்காவிற்கு நல்லது என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் அதற்கேற்ப வழிநடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை