இந்தியாவில் இந்தாண்டு 10 லட்சம் வாகனங்கள் விற்பனை 40 சதவீத எலக்ட்ரிக் வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தியானவை: தொழில் துறை தகவல்

சென்னை: இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனையான மின்சார வாகனங்களில் 40 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவி வெப்பமையம் உள்ளிட்ட சுற்றுசூழல் காரணங்கள் மற்றும் உலக அளவில் குறைந்து வரும் படிம எரிப்பொருட்கள் போன்ற காரணங்களால் உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தி வருகின்றனர், மேலும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அதிகமானோர் மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை, பெட்ரோல்-டீசல் வாகனங்களின் பயன்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வந்த தீர்க்கதரிசியாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேலும், எதிர்காலத்தில் எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களே இல்லாத உலகத்தை உருவாக்கவும் பொருட்டு செயல்படத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவிலும் இதே மாதிரியான முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே பசுமை வாகன இயக்கத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு மின்சார வாகன கொள்கையை வெளியிட்டது. மேலும் மின் வாகன உற்பத்தியில் பல முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் டிவிஎஸ், ஓலா மற்றும் ஏத்தர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன.

இவற்றில் ஓலா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வரேவற்பு கிடைத்து வருகிறது. இது தமிழகத்தை மிகப் பெரிய மின் வாகன உற்பத்தி மையமாக மாற்றி வருகிறது. இந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தை மையமாக கொண்டு இன்னும் பல நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 லட்சத்து 10ஆயிரம் வாகனங்கள் தயாரித்துள்ளதாக தமிழகத்தில் முதலீடுகளை ஊக்குவித்து, ஒருங்கிணைக்கும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு தொடங்கி கடந்த செப்.20ம் தேதிவரை இந்தியாவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 10லட்சத்து 44 ஆயிரத்து 660 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் இருந்து மட்டும் பதிவான மின் வாகனங்களின் எண்ணிக்கை 4,14,802ஆக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா எலெக்டிரிக் தொழிற்சாலையில் 1,75,608 வாகனங்களும், டிவிஎஸ் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் 1,12,609 வாகனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 30 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கணிசமான அளவில் ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாகன உற்பத்தியின் தலைநகராக தமிழ்நாடு திகழும் நிலையில் அடுத்தப்பட்டமாக மின்சார வாகன உற்பத்தியிலும் முக்கிய தடத்தை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மின்சார வாகனம் பிரபலம் அடைந்து வரும் நிலையில் தமிழக அரசும் மின்சார வாகன கொள்கையை வெளியிட்டுள்ளது. மின்சார வாகன பயன்பாட்டு சூழலை ஊக்குவிக்கும் விதமாக பேட்டரிகள் தயாரிப்பது, சார்ஜிங் உட்கட்டமைப்புகள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள இந்த கொள்கை செயல்பட்டு வருகிறது.

சென்னை, கோவை, நெல்லை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 6 நகரங்கள் ஆற்றல் மிக்க மின்வாகன மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பயிற்சிபெற்ற, அதிக ஆற்றல்மிக்க பணியாளர்கள், சிறந்த உதிரிபாகங்கள் உற்பத்தி சூழல் மற்றும் எளிதில் கிடைக்ககூடிய பாகங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற சங்கிலி வளைய அமைப்பு மின்சார வாகன துறைக்கு இயற்கையாகவே சாதகமான சூழலாக அமைந்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள் மின்வாகன உற்பத்திக்கு ₹50ஆயிரம் கோடி முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1.5லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை