இந்தியாவிலேயே முதன்மையான வளமான மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை, தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்தான திட்டங்கள் தொடர்பான 2வது ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உள்பட 13 துறைகளை சார்ந்த நடைமுறையில் உள்ள 55 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 35 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த முறை ஆய்வின்போது, உங்களது துறைகளுக்கான முத்திரை திட்டங்களில் தெரிவிக்கப்பட்ட பணி முன்னேற்றத்தினை தற்போது ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரும்பான்மையான திட்டங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், ஒரு சில திட்டங்களில் இன்னும் தொய்வு நிலை இருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலைகளான நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதில், பிரச்னைகளுக்கு இடம் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து தொழில்கள் தொடங்க வழி ஏற்படும்.

ஒவ்வொரு திட்டத்திலும் உங்களது அர்ப்பணிப்பு, பங்களிப்பு அவசியம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கும் போதுதான், அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் நாம் கொண்டு வர முடியும். கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு, மாவட்டங்கள் தோறும், அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எடுத்தநடவடிக்கை காரணமாக, இன்றைக்கு பெரிய மழை வந்தாலும், சென்னையில் மழை நீர் பெரிய அளவில் தேங்குவதில்லை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

திட்டங்களை பொறுத்தவரையில், அவற்றை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதிலும் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாகவும், வளமான மாநிலமாகவும் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், சக்கரபாணி, ஆர்.காந்தி, சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பங்குச்சந்தைகள் சரிவு

விலை குறைபவை எகிறுபவை எவை? பட்ஜெட்டில் சுங்க வரி அறிவிப்புகள் மூலம் இனிமேல் விலை குறையக்கூடிய மற்றும் விலை அதிகரிக்கக் கூடிய பொருட்கள்:

ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி