33வது முறையாக தொடரும் நடைமுறை இந்தியா – பாக். அணுமின் நிலைய தகவல் பரிமாற்றம்

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே 33வது முறையாக அணுமின் நிலையங்கள் குறித்த விவரங்கள் நேற்று பரிமாறி கொள்ளப்பட்டன. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழலில் இருநாடுகளும் தங்கள் நாட்டிலுள்ள அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் பொருட்டு “அணுமின் நிலையங்கள் மீதான தாக்குதலை தடை செய்தல்” என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. 1988 டிசம்பர் 31ம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தம் 1991 ஜனவரி 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

அதன்படி இருநாடுகளும் தங்கள் நாட்டிலுள்ள அணுமின் நிலையங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி பரஸ்பரம் பரிமாறி வருகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு நீக்கம், எல்லை தாண்டிய தீவிரவாதம், பஞ்சாப் எல்லை வழியாக ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் இருநாடுகள் உறவில் விரிசல் நீடிக்கிறது.

இந்நிலையில் ஒப்பந்தப்படி 33வது முறையாக நேற்று இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் அணுமின் நிலையங்களின் பட்டியலை பரிமாறி கொண்டன. இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்கள் குறித்த விவரங்களை டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் இந்திய வௌியுறவுத்துறை அதிகாரிகள் அளித்தனர். அதேபோல் பாகிஸ்தானிலுள்ள அணுமின் நிலையங்கள் பற்றிய தகவல்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கப்பட்டது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்