அநாகரீக செயல்

வைகொடிசியா அரங்கில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 11ம் தேதி தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன் ஏற்பாட்டின்பேரில் இந்த கலந்துரையாடல் நடந்தது. இதில், கோவை அன்னபூர்ணா குழுமம் உரிமையாளரும், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவருமான சீனிவாசன் பேசுகையில், ‘‘ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாசமான ஜிஎஸ்டி வரி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் வானதி சீனிவாசன் எம்எல்ஏவும் எங்கள் கடைக்கு வந்து, சண்டை போட்டுள்ளார். பன்னுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆனால் அதற்குள் கிரீம் வைத்து கொடுத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வருகிறது. ஒரு குடும்பமாக வந்தால் கம்ப்யூட்டரே திணறுகிறது’’ என காமெடியாக பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதாவது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் உள்ள குளறுபடிகளை சீர்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இவ்வளவுதான் மேட்டர்.

சீனிவாசனின் இந்த பேச்சை, மேடையில் அமர்ந்திருந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் கேட்டனர், சிரித்தனர். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ‘‘இதுபற்றி பரிசீலனை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தார். கலந்துரையாடல் நிறைவுபெற்றது. ஆனால் அன்னபூர்ணா சீனிவாசனின் இந்த காமெடியான பேச்சு, அடுத்த சில நிமிடங்களில், சமூக வலைதளங்களில் வைரலானது. இதை கவனித்த அவர், பிரச்னை வேறு விதமாக போகிறதே… இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே… எனக்கருதி, மறுநாளே கோவையில் தங்கியிருந்த நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். ‘‘நான், எந்த கட்சியையும் சேராதவன்’’ என தனது கருத்தை பதிவு செய்து, மன்னிப்பும் கோரினார். இந்த நிகழ்வுக்கும் வானதி சீனிவாசனே ஏற்பாடு செய்தார்.

ஆனால், மன்னிப்பு கேட்ட இந்த வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது, அன்னபூர்ணா சீனிவாசன் தரப்பை கதிகலங்க செய்துவிட்டது. யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாக சென்று மன்னிப்பு கோரினோம். ஆனால், வீடியோ உலகம் முழுவதும் பரவுகிறதே என அவர் நொடிந்து போனார். இந்த வீடியோவை வெளியிட்டது பாஜ தரப்பினர்தான் என்பது வெட்ட வெளிச்சமானது. ஏனெனில், வேறு யாரும் அந்த அறையில் இல்லை. பாஜவினரின் இந்த அநாகரீகமான செயல், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் அரசியல் தலைவர்கள் துவங்கி, ராகுல்காந்தி, கார்கே வரை இந்த விவகாரம் சென்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், பாஜ தவிர, எல்லா கட்சியினருமே இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு ஜனநாயக நாட்டில், தனது கருத்தை பதிவுசெய்ய ஒரு பிரஜைக்கு உரிமை உண்டு. அந்த உரிமை மறுக்கப்பட்டால், இது என்ன சர்வாதிகார நாடா? என்கிற கேள்வி தானாக எழும். அந்த நிலைதான் தற்போது கோவையில் உருவாகியுள்ளது. கருத்து கேட்கிறோம் என அழைத்து, இப்படி தண்டிப்பது நியாயமா? என சாமானிய மக்களும் கேள்வி எழுப்புகிறார்கள். பாஜ தரப்பில் தவறு இருப்பது உண்மைதான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புக்கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். நாட்டில், ஜனநாயக மாண்பு காக்கப்பட வேண்டும். இதை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை