அதிகரிக்கும் செல்வாக்கு

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி மக்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 இலவச உத்தரவாத திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தது. அதன்படி மாநிலம் முழுவதும் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், 200 அலகு மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500 என்று அனைத்தையும் ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில் நிறைவேற்றியது.

இதனால் காங்கிரசை விமர்சிக்க முடியாமல் திணறிய மாநில பாஜ தலைவர்கள், இலவச திட்டங்களால் மாநில பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று குற்றம்சாட்டினர். அதே சமயம், தென்மேற்கு பருவமழை பொய்த்து கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய அரசு நிவாரண நிதியுதவி தராமல் இழுத்தடிப்பு செய்து வந்தது. இதை பொருட்படுத்தாத முதல்வர் சித்தராமையா, விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000த்தை மாநில அரசு சார்பில் செலுத்தினார். இதனால் மக்களிடம் காங்கிரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

ஆனால் 25 பாஜ எம்பிக்கள் இருந்தும் ஒன்றிய அரசிடம் வறட்சி நிவாரண நிதி பெற்று தராமல் அரசியல் செய்யும் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மக்களவை தேர்தலில் எப்படியாவது கர்நாடகாவில் 25 தொகுதிகளை தக்கவைத்துக்கொள்ள பாஜ பலவகையில் அரசியல் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் அரசு இவர்களது வியூகத்தை உடைத்து மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்திக்கொண்ேட வருகிறது. இந்த முறை மக்களவை தேர்தலில் 25 இடங்களை காங்கிரஸ் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை முதல்வர் சித்தராமையா உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில், கர்நாடக மாநில பேரவை தேர்தலில் சிறுபான்மையினர் காங்கிரசை முழுமையாக ஆதரித்ததால் அமோக வெற்றியை பெற்றது. அதே போல மக்களவை தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக வென்றெடுக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. சன்னி முஸ்லீம்கள் மாநாட்டில் துணை முதல்வர் டி.கே.,சிவகுமார் கலந்து கொண்டது பாஜவின் கோட்டையாக விளங்கும் தென் கர்நாடக பகுதிகளில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசலை ஏற்படுத்த பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமி மேற்கொண்டு வரும் திட்டங்களை முதல்வர் சித்தராமையா உடனுக்குடன் தவிடுபொடி ஆக்கிவிடுகிறார்.

இதனால் காங்கிரசை எந்த மாதிரி விமர்சிக்கலாம் என்று பாஜ-மஜத கூட்டணி ஆலோசித்து வருகிறது. ஆனால் மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறது. கடந்த பாஜ அரசு கண்டுகொள்ளாத தங்களது கோரிக்கையை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கான பலன் வரும் மக்களவை தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை