கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரிப்பு: சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை

சென்னை: கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரித்துள்ளதாகவும், சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் உச்சபட்ச மின் தேவை 17,035 மெகா வாட்டாகவும், பிப்ரவரியில் 17,690 மெகா வாட்டாகவும் இருந்தது. கடந்த ஆண்டு மின் தேவையுடன் ஒப்பிடும் போது, 11.1சதவீதம் மற்றும் 9சதவீதம் கூடுதலாக இருந்தது. இந்நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் கோடை காலம் என்பதால், மார்ச் மாதத்தில் 18,000 மெகாவாட், ஏப்ரலில் 19,900 மெகாவாட் வரை உட்சபட்ச மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டின் அதிகபட்ச மின்தேவையை தாண்டி கடந்த வெள்ளிக்கிழமை மின் தேவை அதிகமாக இருந்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் உச்ச மின் தேவை கடந்த மார்ச் 22ம் தேதி 19,409 மெகாவாட் என்ற அளவை எட்டியது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பதிவான 19,387 மெகாவாட்டை தாண்டியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக மின் விசிறிகள் மற்றும் ஏசிகளின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கு மூம்முனை மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் மின் தேவை அதிகரித்தது. சோலார் மின் உற்பத்தி சரியாக இருந்ததால், எந்த சிரமமும் இல்லாமல் தேவையை பூர்த்தி செய்தோம். ​​சூரிய சக்தியில் இருந்து 4,162 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்தமாத இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் மின் தேவை 20,000 மெகாவாட்டைத் தாண்டும், இந்த கோடையில் 21,000 மெகாவாட்டாக உயரும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மின் தேவை அதிகரித்து வருகிறது, ஆண்டுக்கு ஆண்டு மின் தேவை 8சதவீதம் அதிகரிப்பது இயல்பானது. 2023 உடன் ஒப்பிடும்போது ஜனவரியில் மின் தேவை 11சதவீதமும், பிப்ரவரியில் 9சதவீதம் அதிகரித்தது. மார்ச் மற்றும் ஏப்ரலில், இது 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். தேவையை பூர்த்தி செய்ய, தனியார் நிறுவனங்களுடன் குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களையும், வடகிழக்கு மாநிலங்களுடன் மின் பரிமாற்ற ஒப்பந்தங்களையும் செய்து, ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 4,321 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. 800 மெகாவாட் திறனுடன் சமீபத்தில் திறக்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் நிலை 260 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இறக்குமதி நிலக்கரி வரவை தொடர்ந்து, மார்ச் 26க்குப் பிறகு இந்த உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 700 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல்மின்நிலைய யூனிட் 1 மற்றும் 2ல் மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும். கூடங்குளம் யூனிட் 1 ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உற்பத்தி தொடங்கும். மே மாதத்தில் கூடங்குளத்தின் 2வது யூனிட் எரிபொருளுக்காக மூடப்படும் நேரத்தில், காற்று சீசன் தொடங்கும், மேலும் அதிக சிரமமின்றி தேவையை சமாளிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!