தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 8 மாதத்தில் மட்டும் 185க்கும் மேற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பெரிய அளவிலான உடல்காயங்களும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. ஆனால், இது போன்றவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. இதனால் பொதுமக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது.

தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 8 மாதத்தில் மட்டும் இதுவரை 185க்கு மேற்பட்ட இறந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023ம் ஆண்டு 178 நபர்களும், 2022ம் ஆண்டு 156 நபர்களும், 2021ம் ஆண்டு 60 நபர்களும், 2020ம் ஆண்டு 55, 2019ம் ஆண்டு 127 நபர்களும் நபர்களும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உடல் உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டை தொடர்ந்து ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அறிவித்ததில் இருந்து இதுவரை 246 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். ஒருவர் மூளை சாவு அடைந்ததை உறுதி செய்வதற்கும் அவர்கள் தானம் செய்த உடல் உறுப்பை முறையாக மற்றொருவருக்கு கொண்டு செல்வதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 24 கல்லூரிகளில் இது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் மூளை சாவடைந்த 70% குடும்பங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு