ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; 10வது நாளாக அருவிகளில் குளிக்க தடை!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10வது நாளாக அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து 16,000 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 10வது நாளாக அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 18,094 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 17,586 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7,500 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 96.90 அடியிலிருந்து 98.56 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 62.99 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் 62.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related posts

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; களமிறங்குவார்களா சுப்மன் கில், ரிஷப் பண்ட்!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு