வருமான வரிச்சலுகை முதல் கடன் தள்ளுபடி வரை அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றிய ஒன்றிய பட்ஜெட்

புதுடெல்லி: தேர்தல் வர உள்ள நிலையிலும், ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் எந்த ஒரு சலுகை அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதனால், வரிச்சலுகை கிடைக்கும், விவசாயக் கடன்கள் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். ஒன்றிய பாஜ அரசு கடந்த ஆண்டு கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஒவ்வொரு ஆண்டும் வரிச்சலுகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டுதான் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. வருமான வரி செலுத்துவோர் புதிய முறை மற்றும் பழைய முறையில் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

நடப்பு ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடைசி பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் என்றாலும், புதிய அறிவிப்புகள், திட்டங்களை வெளியிடுவதை பாஜ அரசு தனக்கான பாணியாகவே மாற்றி விட்டது. இதனால் இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என பல தரப்பினரும் எதிர்பார்த்தனர்.

வருமான வரிச்சலுகை: வரி வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதால், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இதனால், வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 8 கோடிக்கு மேல் அதிகரித்தது. கடந்த டிசம்பர் 31ம் தேதிப்படி 8.18 கோடிப் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த முறை ரூ.10 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அறிவிப்பு வெளியாகும் என இவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்றைய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது 8 கோடிப் பேருக்கும் பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.

வீட்டுக்கடன் வட்டி: ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து மந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஒன்றிய அரசு, இந்த துறையை ஊக்குவிக்க வீட்டுக் கடன் வட்டிச் சலுகை குறித்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

வீட்டுக்கடன் வட்டி செலுத்துவோர் , பிரிவு 24பி-யின் படி ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிச்சலுகை பெறுகின்றனர். ஒன்றிய பாஜ அரசு முதன் முதலாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 2014ம் ஆண்டில் இருந்தே இந்த வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 10 ஆண்டு ஆட்சி முடிவுறும் நிலையிலாவது இதன் மூலம் வரிச்சலுகை பெற வழி கிடைக்கும் . ரூ.5 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் வட்டிக்காவது வரிச்சலுகை பெறலாம் என நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கட்டுமான பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகள்`விலை அதிகரித்துள்ளது. இதனால் ரூ.4 லட்சமாவது ஆக்கியிருந்தால் இந்த துறை முன்னேற்றத்துக்கும், வீடு வாங்குவோர் வரிச்சலுகை பெறவும் உதவியாக இருந்திருக்கும் என ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலிவு விலை வீடு: அடுத்த 5 ஆண்டுக்குள் மேலும் 2 கோடி பேருக்கு மலிவு விலை வீடு கட்டித் தரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், வீடுகள் விலை உச்சத்துக்குச் சென்றுள்ள நிலையில், மலிவு விலை வீடுகள், அதாவது நடுத்தர மக்கள்வாங்கும் வகையிலான வீடுகள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறையினர். கொரோனா பரவலுக்குமுன்பு 2019ம் ஆண்டில் மலிவு விலை வீடுகள் விற்பனை மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதமாக இருந்தது. இது 2022ல் 30 சதவீதமாகவும், 2023ல் 230 சதவீதமாகவும் ஆகி விட்டது. சென்னை, மும்பை, டெல்லி ,பெங்களூரு உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் இந்த வகை வீடுகள் 18 சதவீதமாகக் குறைந்து விட்டன. ரியல்எஸ்டேட் துறையை ஊக்குவிக்காதவரை இத்தகைய வீடுகள் விற்பனையும், எண்ணிக்கை அதிகரிப்பும் எப்படி சாத்தியமாகும் என ரியல் எஸ்டேட் துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.

மூல ஆதாய வரி: வீடுகளை விற்பவர்களுக்கு 20 சதவீத மூலதன ஆதாய வரி தற்போது அமலில் உள்ளது. இதனை குறைக்க வேண்டும். அப்போதுதான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கப்படும். இதன் பிறகே பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை சாத்தியமாகும். எனினும், இதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை என ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்தனர்.

சிறுசேமிப்பு திட்டங்கள்: உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழ்நிலையிலும் இந்தியாவில் பாதிப்பு மிக குறைவாக இருந்ததற்குக் காரணம் நம் மக்களிடையே இருந்த சிறுசேமிப்புப் பழக்கம்தான். ஆனால், இன்று சிறுசேமிப்பு என்பதே வழக்கத்தில் இல்லாத ஒன்றாக மாறி விட்டது. காரணம், சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைவாக இருப்பதுதான். குறிப்பாக, அஞ்சலக திட்டங்கள் ஒரு காலத்தில் முதலீட்டுக்கான கவர்ச்சித் திட்டங்களாக இருந்தன. ஆனால், ஒன்றிய பாஜ அரசு வந்ததில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறைந்து விட்டன. பங்குச்சந்தை முதலீடு எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. பணம் இழப்பதற்கான அபாயமும் மிக அதிகம். எனவே, சாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் வட்டி உயர்வு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பட்ஜெட்டில் நிறைவேறவில்லை.

தனிநபர் கடன்கள்: வீட்டுக் கடன் போல, தனிநபர், வாகன கடன்கள் பல குடும்பங்களின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. இதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பண வீக்கத்தைக் குறைப்பதற்காக வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி தயக்கம் காட்டுகிறது. ஆனால், பண வீக்கத்தை குறைத்து இதன் மூலம் வட்டி விகிதம் குறைவதற்கான நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட வேண்டும் என பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். மாறாக, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பண வீக்கம் குறைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு கடன் வட்டி குறைப்புக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

விவசாய கடன்கள் : வேளாண் துறைதான் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. ஆனால், ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் இத்துறைக்குப் பாதகமாக உள்ளதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விளைவித்த பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் அவர்கள் தவிக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இன்னும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி அறிவிப்பாவது வரும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இது குறித்த எந்த அறிவிப்பும் வராதது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

ஓட்டல்கள்: ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு அறை வாடகை ரூ.7,500க்கு மேல் இருந்தால் 18 சதவீத ஜிஎஸ்டியும், ரூ.7,500க்கு கீழ் 12 சதவீத ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. இது ஓட்டல்களின் லாபத்தை குறைத்து விடுவதோடு, குறைந்த கட்டணத்தில் அறை வாடகை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் முடக்கி விடுகிறது.
ஆனால், பட்ஜெட்டில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மொத்தத்தில் சாமானிய மக்கள் பலரும் எதிர்பார்த்த அறிவிப்புகள், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும் பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை என பல தரப்பினரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்