ரகம் ரகமாக மின்னும் ராக்கிகள் மூலமாகவும் வருமானம் ஈட்டலாம்!

முன்பெல்லாம் வட இந்தியர்கள் மட்டும்தான் ரக்‌ஷா பந்தன் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவாங்க. ஆனால் நான் சென்னை வந்து 25 வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு. ஆனால் இங்கே தற்போது எல்லா மதத்தினரும், தென்னிந்தியர்களும் கூட ரக்ஷா பந்தனை சகோதரர் சகோதரிகள் விழாவாக கொண்டாடுறாங்க. இதுதான் என்னுடைய மூலதனம்’… தன்னம்பிக்கையாக பேசத் துவங்குகிறார் அர்ச்சனா மாலு. கைகளால் பொறுமையாக ரக்‌ஷா பந்தனுக்கு தேவையான ராக்கிகள் துவங்கி நண்பர்கள் தினத்திற்கு தேவையான ப்ரெண்ட்ஷிப் பேண்ட், வீட்டின் அழகை கூட்டும் அலங்காரப் பொருட்கள், கதவுகளுக்கான டெக்கரேஷன் ஐட்டங்கள், விநாயகர் சதுர்த்தி, கொலு, தீபாவளி பொங்கல் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்குமான அலங்கார பொருட்கள் என அத்தனையும் கைகளால் செய்து அதன் மூலம் கணிசமான வருமானம் ஈட்டி வருகிறார் அர்ச்சனா மாலு.

‘எனக்கு சொந்த ஊர் ராஜஸ்தான், திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆகிட்டேன். சுமார் 25 வருடங்கள் ஆச்சு. சென்னை தான் இப்போது எனக்கு சொந்த ஊர் போல இங்கே குடும்பத்துடன் செட்டிலாகிட்டேன். ஆறு வருஷங்களுக்கு முன்னாடி என்னுடைய தோழி ஒருவருக்காக நானே என் கைகளால் ஒரு அன்பளிப்பு செய்து அவங்களுக்கு கொடுக்கணும்னு ஆசைப்பட்டு செய்ய ஆரம்பித்தேன். அதை அப்படியே என்னுடைய வாட்ஸப் ஸ்டேட்டஸ், சமூக வலைத்தளங்கள் இப்படி எல்லா இடங்களிலும் போஸ்ட் செய்தேன். அதன் பிறகு தான் எனக்கு நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. அங்கே இருந்து ஆரம்பிச்சு நிறைய வெரைட்டிகளில் அன்பளிப்புகள் தான் முதலில் செய்ய ஆரம்பிச்சேன்’ என்னும் அர்ச்சனா மாலு ரூ. 10 துவங்கி கைகளால் செய்யப்பட்ட ராக்கி, பிரேஸ்லெட், ஹேண்ட் கிராப்ட் நகைகள், வீட்டு அலங்கார பொருட்கள் என அனைத்தும் செய்து வருகிறார்.

‘ எனக்கு விற்பனை களம் சோசியல் மீடியா தான். எதை நான் செய்து முடித்தாலும் அதை தவறாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எல்லாத்திலும் போஸ்ட் செய்திடுவேன். அதன் மூலம் நிறைய ஆர்டர்கள் வரும். வீட்டு கதவு மற்றும் ஜன்னல் இதனுடைய அளவு அனுப்பி இதற்கேற்ற அலங்கார பொருட்களும் கேட்டு செய்து வாங்கிப்பாங்க. அதேபோல் ராக்கி பொருத்தவரை வருடத்திற்கு ஒருமுறைதான் சீசன். இதில் பல ராக்கிகளை நான் செய்யும் பொழுதே விசேஷம் முடிந்த பின் அதை அப்படியே பிரேஸ்லெட்டாக மாத்திக்கிற மாதிரிதான் செய்திருப்பேன். அதிலும் இப்போது ட்ரெண்ட் இந்த ரெய்சின் நகைகள் அதிகமாக விற்பனையாகுது. அதனால் என்னுடைய ராக்கிகளிலும் அதிகமா ரெய்சின் வகையறாக்களை பார்க்கலாம். ராக்கிகள் கான்செப்டையே சிலர் பிரண்ட்ஷிப் டே பேண்டுகளாகவும் வாங்கிக்கறாங்க. இரண்டு ஸ்பெஷல் நாட்களும் ஆகஸ்டில் வருவதால் இதனுடைய உருவாக்கத்தை ஜூன் ஜூலை மாதங்களிலேயே நான் ஆரம்பிச்சுடுவேன். ஒரு ராக்கி தயாரிக்க இரண்டு நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரையிலும் அதன் டிசைன் பொருத்து மாறும்’ என்னும் அர்ச்சனா இதில் தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசத் துவங்கினார்.

‘நிறைய பேர் கிளாஸ் எடுப்பீங்களா அப்படின்னு கேட்கறாங்க. நானும் ஒரு இரண்டு வருடங்களா அதற்கு முயற்சி செய்துட்டு இருக்கேன். நிச்சயம் கூடிய விரைவில் இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி வகுப்புகள் எடுக்கிற திட்டமிருக்கு. இதற்கிடையிலே இதே ஹேண்ட் கிராப்ட் பொருட்களை இன்னும் சிறப்பாக செய்து ஒரு யூடியூப் சேனலும் துவங்க வேண்டும் அதற்கான வேலைகளில் என் குடும்பத்தாரும் இருக்கிறார்கள். சாதாரணமா ஒரு சின்ன அன்பளிப்பு செய்யணும் அப்படின்னு நினைச்சு தான் இதை ஆரம்பித்தேன். இன்னைக்கு எங்களுடைய குடும்ப தொழிலா மாறி நல்ல வருமானமும் கொடுத்துக்கிட்டு இருக்கு எதையும் சாதாரணமாக எடை போடாம நமக்கு என்ன வருமோ, எது தெரியுமோ அதை வைத்து ஒரு சிறு தொழில் துவங்கினாலே ஓரிரு வருடங்கள்ல ஒரு சின்ன வருமானம் நமக்குக் கிடைக்க ஆரம்பிச்சிடும். இப்போதாவது என் குழந்தைகள் நன்கு வளர்ந்துட்டாங்க. நான் இந்த தொழிலை துவங்கும் போது அவங்க ரொம்ப சின்ன பிள்ளைங்க. குடும்ப பொறுப்பு இதற்கிடையிலே தான் இந்த தொழிலையும் நான் செய்ய ஆரம்பிச்சேன். மேலும் குடும்பத்தாரும் ஒவ்வொரு பெண்ணின் முயற்சியிலும் கை கொடுத்தாலே ஒண்ணா சேர்ந்து நிறைய சாதனைகளை படைக்கலாம்’ உற்சாகமான வார்த்தைகளை உதிர்க்கிறார் அர்ச்சனா மாலு.

Related posts

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!

பதிப்பகத்துறையில் தடம் பதிக்கும் சாதனைப் பெண்மணி!