வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிப்பு ரத்து: குற்றச்சாட்டு பதிவு செய்து மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவர் மீதான வழக்கை விசாரணை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில் அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு வில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கிலும் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தால் அமைச்சரும், அவரது மனைவியும் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை தொடங்கியது. வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் நேற்று காலை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

எனவே, இரு வழக்குகளிலும் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இருவரையும் விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வரும் செப்டம்பர் 9ம் தேதியும், தங்கம் தென்னரசு செப்டம்பர் 11ம் தேதியும் வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். விசாரணை தினசரி அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்துள்ளார்.

Related posts

மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்

வேட்டவலம் அரசுப்பள்ளி மாணவிகள் குரு வட்ட தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்

அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா கோரிக்கை