நல்ல வருமானம் தரும் நந்தியாவட்டை…50 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம்

விவசாயத்தை திட்டமிட்டு செய்தால் லாபம் நிச்சயம் என்பதை பலர் நிரூபித்தே வந்திருக்கிறார்கள். இருக்கும் இடம் கொஞ்சமாக இருக்கலாம். ஆனால் அதில் நம் என்ன பயிரிடப்போகிறோம்? எப்படி பராமரிக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். சேலம் மாவட்டம் சின்னத்திருப்பதி அடுத்த எட்டுக்காடு பகுதியை சேர்ந்த பேபி சேகர் தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி, கால்நடை வளர்ப்பு என அசத்தி வருகிறார். இதில் 50 சென்ட் நிலத்தில் இவர் பயிர் செய்துள்ள நந்தியாவட்டப் பூஞ்செடி ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் லாபம் தருகிறது. ஒரு மாலைப்பொழுதில் பேசி சேகரை சந்தித்தோம். நந்தியாவட்டப் பூக்களைப் பறித்தவாறு பேச ஆரம்பித்தார்.
”என்னுடைய சொந்த ஊரு சேலம்தான். எங்கள் குடும்பத்தின் பூர்வீகமே விவசாயம்தான். எங்கள் உறவினர்கள் எட்டு பேர் சேர்ந்து இந்த எட்டுக்காடு பகுதியில் 16 ஏக்கர் நிலத்தை 60 வருடங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கினோம். இந்த இடத்தை ஆளுக்கு 2 ஏக்கர் என்று பிரித்துக் கொண்டு அதில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் தென்னை, நந்தியாவட்டம், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை பயிர்செய்து வருகிறோம். 5 நாட்டுப் பசு மாடும் உள்ளன. 1 ஏக்கரில் 100 தென்னை மரமும், இதில் ஊடுபயிராக சோளம் மற்றும் மாட்டுத்தீவனமும், 50 சென்ட் நிலத்தில் நத்தியாவட்டம் பூச்செடி சாகுபடியும் செய்து வருகிறோம்.

தென்னையை பொருத்தவரையில் முழுவதுமே நாட்டு ரகம்தான். அதிக மகசூல் கிடைக்க ஒவ்வொரு மரத்திற்கும் குறைந்தபட்சம் 10 அடி விட்டமுள்ள வட்டப் பாத்தி எடுத்து அதில், சிறிதாக குழிதோண்டி ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 5 கிலோ வேப்பம்புண்ணாக்குத் தூளை 3 மாதங்களுக்கு ஒருமுறை உள்ளே போட்டு மூடிவிடுவோம். ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் குறைந்த அளவாக 10 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்தை, மரத்திலிருந்து 5 அல்லது 4 அடி தொலைவில் சிறிதளவு குழிதோண்டி உள்ளே போட்டு மூடி நீர்ப்பாசனம் செய்வோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை காய் பறிப்போம். இதில் ஒவ்வொரு போகத்திற்கும் தேங்காய்களின் எண்ணிக்கை வேறுபடும். ஒருமுறை 2000 காய்கள், 1800 காய்கள், 1600 காய்கள் என மாறி மாறி கிடைக்கும். தேங்காய் அளவைப் பொருத்து 8 முதல் 12 ரூபாய் வரை விலை வைத்து சந்தையில் விற்கிறோம். ஏக்கருக்கு ஒரு போகத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை லாபமாகக் கிடைக்கிறது. தேங்காயில் இருந்து எண்ணெய் எடுத்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறோம். சந்தையில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.200 வரை விற்பனை செய்கிறோம். அதேபோல் பசு மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலை லிட்டர் ரூ.44 என வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம். இதன்மூலம் மாதத்திற்கு ரூ.18 ஆயிரம் வரை வருமானமாக கிடைக்கிறது. தென்னையில் ஊடுபயிராக குண்டுமல்லிப் பூச்செடியை வைத்திருந்தோம். அதன் பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் அதற்கு மாற்றாக மாட்டுத்தீவனத்தைப் பயிர் செய்திருக்கிறோம். இதனால் சந்தையில் மாடுகளுக்காக தவிடு வாங்கும் செலவு குறைகிறது” என்று பேசிய பேபி சேகர், நந்தியாவட்டம் பூ சாகுபடி குறித்து விவரித்தார்.

“ 10 ஆண்டுகளுக்கு முன்பு நந்தியா

வட்டம் பூ பதியத்தை வாங்கி வந்து ஒரு 50 செண்ட் நிலத்தில் சாகுபடி செய்தோம். அந்த காலகட்டத்தில் ஒரு பதியத்தின் விலை ரூ.13. நடவுசெலவு ரூ.2. ஒரு பதியத்திற்கு ரூ.15 செலவு செய்து 300 பதியன்கள் நடவு செய்தோம். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரம் உள்ள குழி எடுத்து அதில் பதியத்தை வைத்து நடவு செய்தோம். இயல்பாகவே நந்தியாவட்டத்தில் பூச்சிகளின் தாக்குதல் சற்று குறைவாகவே இருக்கும். அதனால் மருந்து அடிப்பது இல்லை. மாதத்திற்கு ஒருமுறை உயிர் உரங்களை எருவில் கலந்து வைப்பதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கிறது. இவை மரப்பயிர் போல் அதிகமாக வளரும். 6.5 அடி மற்றும் 8 அடிக்கு மேல் வளர விடாமல் ஒடித்து விட வேண்டும். அப்பொழுதுதான் பக்கக் கிளைகள் அதிகமாக தோன்றும். தண்ணீர் அதிகம் இருந்து பாய்ச்சினாலும், மழை இருந்தாலும் செடி வேகமாக வளரும்.

இவை காற்று அடித்தால் ஒடிந்து விடும். இதனால் கிளைகளை சணல் கொண்டு பந்தலில் கட்டி விட வேண்டும். தண்ணீர் பாயும்பொழுது ஹியூமிக்காஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து இடுகிறோம். இதனால் செடி நன்றாக இருக்கிறது. செடி நடவு செய்து 3 முதல் 4 மாதத்தில் பூ வர ஆரம்பிக்கும். ஒரு செடியில் 100 கிராம் வரை இப்பொழுது பூ வருகிறது. பூ எடுக்கும்பொழுது பச்சைக் காம்புகளுடன் ஒடித்து எடுக்க வேண்டும். அப்படி ஒடித்து எடுக்கும்பொழுது பால் வரும். அந்தப் பால் கையில் ஒட்டிக்கொண்டால் ஒரு சிலருக்கு ஆகாது. கையில் புண் வந்துவிடும். ஆகையால் பூ எடுக்கும்பொழுது கையுறை அணிந்துகொள்ளலாம்.

அதிகமான விவசாயிகள் பயிர் செய்தால் வயலுக்கே வந்து வியாபாரிகள் எடுத்து செல்வார்கள். இப்பொழுது விற்பனைக்கு ஒரு கிலோ பையாக போட்டு மார்க்கெட் விலையை பொருத்து ஒரு கிலோ பூவினை ரூ.200 லிருந்து 250 வரை விற்பனை செய்கிறோம். முகூர்த்த நாட்களில் இதன் விலை கிடுகிடுவென்று ஏறிவிடும். மணமக்களுக்கு இந்தப் பூவில் வண்ணங்கள் தடவி, மாலை கட்டி பூ வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். பெரும்பாலோனோர் மல்லிகைப் பூவிற்கு மாற்றாக நந்தியாவட்ட பூவினையே பயன்படுத்துகின்றனர். நந்தியா வட்டத்தை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகவும் பயன்படுத்துகின்றனர். கண் எரிச்சல், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், தோல் வியாதிகளுக்கும் நந்தியாவட்டம் சிறந்த தீர்வளிக்கிறது. நந்தியாவட்டத்தில் மட்டும் செலவு போக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. நம்மிடம் உள்ள நிலத்தை சரியான அளவில் பிரித்து பல பயிர் சாகுபடி செய்தால் ஒன்றில் நஷ்டம் ஏற்பட்டால் மற்றொன்றின் மூலம் அந்த நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ள முடியும்” என்கிறார்.

தொடர்புக்கு:
பேபி சேகர்- 80159 39284.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!