மெகா வருமானம் பார்க்கும் மெரைன் இன்ஜினியர்

விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டும் என விரும்பியும் பல்வேறு தொழில் செய்பவர்கள், அந்தத் தொழில்களோடு விவசாயத்தையும் சேர்த்து செய்வார்கள். இன்னும் சிலர் தங்களின் தொழில், வேலையை விட்டுவிட்டு விவசாயத்திற்கு வருகிறார்கள். ஆனால் அதில் சாதித்தவர்கள் என்று பார்த்தால் சரியான கணக்கை சொல்ல முடியாது. இந்த கன்னியாகுமரிக்காரர் ஆஸ்திரேலியாவில் கப்பல் பணியில் இருந்துவிட்டு, விவசாயத்திற்காக சொந்த ஊர் திரும்பி வெற்றி கண்டிருக்கிறார். நெல்லை மாவட்டம், வள்ளியூர், அச்சம்பாடு அருகே புதுக்குடியிருப்பு பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை வாங்கி வெள்ளை முஸ்கின் சாமந்தி, ஆரஞ்சுக் கேந்தி, சிவப்புக் கேந்தி உள்ளிட்ட பூக்களையும், வரிகத்தரிக்காய், ஆண்டார்குளம் கத்தரிக்காய், வழுதலங்காய் கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளையும், கூடுதலாக பன்னீர் திராட்சையையும் பயிரிட்டு அசத்தலான வருமானம் பார்த்து வருகிறார். இதற்கு இவர் கையாண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. ஒரு மாலைப்பொழுதில் செலினைச் சந்தித்தோம்.

`‘நான் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்து கப்பலில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆஸ்திரேலிய பைலட் அவரது விவசாய நிலத்தில் திராட்சை பயிரிடுவதாக தெரிவித்தார். நான் எங்களது ஊர் வெப்பமான பகுதி, அங்கு திராட்சை பயிரிட முடியாது என்றேன். அதற்கு அந்த பைலட் ஆஸ்திரேலியாவில் குளிர்காலத்தில் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் கோடையில்தான் திராட்சையைப் பயிரிட முடியும் என்றார். நானும் திராட்சை விவசாயம் செய்ய வேண்டும் என அப்போது விருப்பம் கொண்டேன். அதற்குக் காரணம் எங்கள் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் என்பதுதான். கப்பலில் வேலை என்பது அத்தனை எளிதானது அல்ல. அந்த வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்வதற்காக ஊர்நாட்டுக்கு வந்தேன். 2014ம் ஆண்டில் இந்தப் பகுதியில் ரூ.3 லட்சத்திற்கு 11 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். எங்கள் சொந்த ஊரில் உள்ள நிலப்பகுதி களிமண் நிறைந்து காணப்படும். அங்கு செம்மண் போட்டு அதன்மேல் பூக்களை பயிரிட்டால் நன்கு வளரும். இந்தப் பகுதி இயல்பாகவே செம்மண் நிறைந்த பூமியாக இருக்கிறது. தண்ணீர் குறைவாக இருந்தாலும் செம்மண் நிறைந்த இந்த பகுதியை நான் விவசாயத்திற்கு தேர்வு செய்தேன். இந்த நிலத்தை வாங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு திராட்சை பயிரிட ரூ.20 லட்சம் செலவு செய்தேன். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் மானியம் கிடைத்தது.

அவ்வளவு செலவு செய்தும் பலன் கிடைக்கவில்லை. மூல விதை திராட்சை இந்த ஊர் வெப்பத்திற்கு வளராது என பின்னர் தெரியவந்தது. இதனால் திராட்சைக்குப் பதில் பாகற்காய் பயிரிட்டேன். அதில் போட்ட பணத்தை எடுத்துவிட்டேன். அதன்பிறகு சோதனை முறையில் பன்னீர் திராட்சையை சிறிது சிறிதாக பயிரிட ஆரம்பித்தேன். பின்னர் பல்வேறு நபர்களிடம் ஆலோசனை பெற்று,பன்னீர் திராட்சையை ஒட்டு கட்டி அடர் நடவு முறையில் மீண்டும் பயிரிட்டேன். அது நல்ல பலன் தந்தது. செடிகள் செழிப்பாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைத்தது. தற்போது மூன்றாவது முறையாக பன்னீர் திராட்சை பயிரிட்டுஇருக்கிறேன்.

இன்னும் ஓரிரு மாதங்களில் மகசூல் எடுக்க இருக்கிறேன்.தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் இஸ்ரேல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2 ஆயிரம் சதுரமீட்டர் கொண்ட 2 பசுமைக் குடில்களை கடந்த 2022ம் ஆண்டில் அமைத்தேன். இந்தப் பசுமைக்குடில்களை ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மானிய உதவியுடன் மொத்தம் ரூ.24 லட்சம் செலவில் அமைத்தேன்.இதில் தற்போது முஸ்கின் சாமந்தி பயிரிட்டு இருக்கிறேன். அதாவது 25 சென்ட் நிலத்தில் மட்டும் இந்த முஸ்கான் சாமந்தியைப் பயிரிட்டு இருக்கிறேன். கல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்தச் செடிகளில் அதிக அளவில் பூக்கள் கிடைக்கின்றன. இது 6 மாதப் பயிர்தான். இதில் 2 மாதங்களுக்கு தொடர்ச்சியாக அபரிமிதமான பூக்களை அறுவடை செய்யலாம். வாரத்தில் குறைந்தபட்சம் 400 கிலோ சாமந்திப்பூ கிடைக்கிறது. அவற்றைப் பறித்து விற்பனைக்காக அனுப்புகிறேன். 1 கிலோ ரூ.250 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு 50 கிலோ பூக்கள் கிடைத்து, சராசரியாக ரூ.300 விலை என விற்றால் கூட ரூ.15 ஆயிரம் வருமானம் பார்க்கலாம். ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை முஸ்கின் சாமந்தி மூலம் வருமானம் கிடைக்கிறது. பொதுவாக ஒரே மாதிரியான செடி வகைகளை பயிரிடும்போது அதன் வேர்கள் வீக்கமடைந்து நூற்புழு தாக்குதலுக்கு உள்ளாகும். இதனால் மகசூல் பெருமளவு பாதிக்கும். அதனைத் தவிர்க்க ஊடுபயிராக சிவப்பு கேந்தி, ஆரஞ்சு கேந்தி பயிரிட்டு இருக்கிறேன். இவை இரண்டும் அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கின்றன. பூக்கள் மட்டுமல்ல, தற்போது கத்தரிக்காய், தக்காளியும் அறுவடை செய்து விற்பனை செய்துவருகிறேன்.கத்தரிக்காயைப் பொருத்தவரை 3 வகையான கத்தரிக்காய்கள் பயிரிட்டு இருக்கிறேன். சராசரியாக 900 கிலோ முதல் 1 டன் வரை கத்தரிக்காய் அறுவடை செய்கிறேன். அவற்றை மொத்த மார்க்கெட்டில் நேரடியாக விற்பனை செய்கிறேன்.

வரி கத்தரிக்காய், ஆண்டார்குளம் கத்திரிக்காய், வழுதலங்காய் ஆகிய கத்திரி வகைகள் அதிக மகசூல் தருகின்றன. நிலப்போர்வை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டு இருப்பதே இதற்கு முக்கிய காரணம். நிலப்போர்வை என்பது செடியின் வேரை தரையோடு பிளாஸ்டிக் கவரால் போர்வை போல் போர்த்தும் முறை ஆகும். இந்த முறையைப் பயன்படுத்துவதால் வேர்களில் ஈரப்பதம் நீண்ட நேரத்திற்கு இருக்கும். முக்கியமாக களைச்செடிகள் வளராது.மேலும் கத்தரிக்காயை, சுண்டைக்காய்ச் செடியுடன் ஒட்டுக் கட்டுவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது. அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை ஒரு செடி மகசூல் தரும். நோய் எதிர்ப்புச்சக்தி ஒட்டுக்கட்டுவது மூலம் அதிகரிக்கும். இதற்காக ஒரு செடிக்கு ரூ.15 செலவு செய்து 6000 செடிகளுக்கு ஆந்திரா மாநிலம், சித்தூரில் ஒட்டுக் கட்டி பயிரிட்டு இருக்கிறேன். சமீபத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை உதவியுடன் தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்றேன். அங்குள்ள விவசாய நடைமுறைகளை நேரில் பார்த்தேன். அங்குதான் பயிர்களுக்கு ஒட்டுக் கட்டும் தொழில்நுட்பங்களை முதன்முதலில் பார்த்து கற்றுக்கொண்டேன். அதைத்தான் இங்கு பயன்படுத்திவருகிறேன். கிள்ளிக்குளம், வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி உதவியுடன் தானியங்கி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தண்ணீர் பாய்ச்சுகிறேன். செல்போனிலேயே தண்ணீர் பாய்ச்சுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது. எங்கிருந்து வேண்டுமானாலும் என்னால் தண்ணீர் பாய்ச்ச முடிகிறது. விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ள இந்தக் காலகட்டத்தில் இந்த தானியங்கி சிஸ்டம் மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கிறது. அடுத்ததாக பசுமைக் குடிலில் சாலேட் வெள்ளரி பயிரிட திட்டமிட்டு வருகிறேன். இதுவும் நல்ல பலன் கொடுக்கும் என நம்புகிறேன்’’ என ஒவ்வொரு வார்த்தையையும் நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார் செலின்.

நெல்லை மாவட்டத்தில் வறட்சியான பகுதியாக விளங்கும் வள்ளியூர் பகுதியில் பசுமைக்குடில், தானியங்கி சொட்டுநீர்ப் பாசனம், நிலப்போர்வை என தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமாக செய்து வரும் செலின், அப்பகுதியின் முன்மாதிரி விவசாயியாக விளங்கிவருகிறார். இதனால் நெல்லை மாவட்டத்தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் செலினை வெகுவாகப் பாராட்டிவருகிறார்கள்.

Related posts

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி