வண்ண விளக்குகளில் வருமானம் ஈட்டலாம்!

வெங்கலம், வெள்ளி, பித்தளை, அதிகபட்சம் மண் இதில் மட்டும் தான் விளக்கேற்ற வேண்டுமா என்ன?. நவராத்திரி துவங்கி பண்டிகைகள் என்றாலே எங்கும் பிரகாசிக்கும் வண்ணங்கள் தான் பிரதானம் எனில் விளக்குகளில் மட்டும் ஏன் கட்டுப்பாடு. இதோ நம் தீபங்களை அலங்கரிக்கும் வண்ணமயமான அடித்தட்டுகளையும் விளக்குகள் வைக்க பல நிறங்களில் மனைகளையும் உருவாக்கி அதில் வருமானம் ஈட்டி வருகிறார் பிரதீபா. எனக்கு சொந்த ஊர் சென்னை தான். எம்பிஏ படிச்சுட்டு ஹெச்.ஆர் ஆக ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன். அப்பா மதனன், அம்மா ஃபெயித். என்னதான் படிச்சு வேலைக்கு போனாலும் பொதுவாகவே ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கலையை கத்துக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன். கல்லூரி நாட்கள்ல ஃபேன்சி நகைகள் நானே செய்து தோழிகள் கிட்டே விற்பனை செய்தேன். முறைப்படி மேக்கப் கத்துக்கிட்டு அந்தத் தொழிலும் ஒரு பக்கம் செய்தேன். சின்ன வயதிலிருந்து ஏதாவது எப்படியாவது கத்துக்கிட்டே இருப்பேன்‘ என்னும் பிரதீபா எப்படி இந்த மண்டலா ஓவியக் கலையை கற்றுக் கொண்டார் விவரிக்கத் தொடங்கினார்.

‘எல்லாமே நானாகவே யூடியூப் பார்த்துக் கத்துக்கிட்டதுதான். என் கணவர் பெயர் கார்த்திக். ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். எனக்கு குழந்தைக்காக வேலையில் இருந்து பிரேக் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. பொதுவாகவே வேலைக்கு போயிட்டு திடீரென அதை நிறுத்திவிட்டு டெலிவரி, குழந்தைப் பராமரிப்புன்னு இருக்கும்போது மனநிலையில் சின்ன சின்ன மாற்றங்கள் உண்டாகும். நிறைய மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். இதைத் தவிர்க்க தான் நான் இந்த மண்டலா ஓவியங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். எனக்கு நானே லைட்டா உணர ஆரம்பிச்சேன், சட்டென வருகிற கோபங்கள் எல்லாம் கூட கட்டுப்பட ஆரம்பிச்சது. அப்படி ஆரம்பித்த இந்த மண்டலா கலையை ஆரம்பத்தில் சுவர் அலங்காரங்களா தான் செய்யத் துவங்கினேன். பொதுவாகவே வட்ட வடிவிலான பொருட்களை வீடு முழுக்க மாட்டி வைத்தால் பாசிடிவ் சூழல் உண்டாகும் அப்படின்னு ஒரு நம்பிக்கை இருக்கு. வாஸ்து முறையில் இந்த வட்ட வடிவங்களுக்கு வரவேற்பு அதிகம். அதனாலேயே வட இந்தியாவில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்ட இந்த மண்டலா சுவர் ஓவியங்கள் இப்போது நம்ம ஊரிலும் பிரபலமாகிட்டு வருது. நானும் அப்படித்தான் என்னுடைய வீட்டுக்காக கத்துக்க ஆரம்பிச்சு அதை அப்படியே என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போஸ்ட் செய்ய ஆரம்பித்தேன். என் குழந்தை பெயர் கனிஷ்கர். அவருடைய இன்னொரு பெயர் எபினேசர் அந்தப் பெயரில்தான் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் துவங்கி இந்த மண்டல ஓவியங்களில் டெகரேஷன் பொருட்களை விற்பனைக்கு போஸ்ட் செய்ய தொடங்கினேன்.

ஆமா என்னுடைய அப்பா இந்து, அம்மா கிறிஸ்டியன், நான் திருமணம் செய்து போன இடம் இந்து என்கிறதால் என் குழந்தைக்கு இரண்டு முறைப் படியும் பெயர் வைத்தோம். அந்த பெயரில் தான் என்னுடைய பிசினஸை உருவாக்கினேன். தொடர்ந்து என்னுடைய மாமியார் எனக்கு நிறைய சப்போர்ட் செய்தாங்க. இந்த மண்டலா ஓவியத்தையே இன்னும் எப்படி எல்லாம் பூஜை அலங்காரங்களில் மாத்தலாம் அப்படின்னு ஐடியாக்கள் கொடுத்தாங்க. குறிப்பா விளக்கு மேடைகளில் நான் கோலங்கள் எல்லாம் கூட வரைஞ்சு இருப்பேன் அதெல்லாம் கூட என்னுடைய அத்தை எனக்கு கொடுத்தது தான். எப்படி ரங்கோலி போட ஒரு நட்சத்திரம் வரைந்தால் அப்படியே அடுத்தடுத்து டிசைன்களை வரைந்து பெரிது படுத்துவோமோ அப்படித்தான், மண்டலா ஓவியங்கள் என்னை நிறைய டெகரேஷன்கள் செய்யத் தூண்டியது. அப்படித்தான் இந்த கற்கள் ஒட்டப்பட்ட விளக்கு பேஸ்கள் டிசைன் செய்தேன். இதில் சிறிய விளக்கு அல்லது, மெழுகு விளக்கு என எதுவும் வைத்துக்கொள்ளலாம். மேலும் கார்த்திகை தீபங்கள் வேளையில் நேரடியாக விளக்குகளை தரையில் வைத்தால் எண்ணெய் கரை அப்படியே வாசலில் பிடிச்சிக்கும். அதற்கும் கூட இந்த விளக்கு டெகர்கள் உதவியா இருக்கும்’ என்ன விலையில் அலங்காரப் பொருட்கள் வைத்திருக்கிறார் பிரதீபா மேலும் தொடர்ந்தார்.

‘ஜனவரி மாதம்தான் இந்த எபினேசர் டெகர்ஸ் ஆரம்பிச்சோம். ரூ.150க்கு விளக்கு அடித்தட்டுகள் துவங்கி சுவர் அலங்காரங்கள் அளவுப் பெருத்து பல விலையில் என் கிட்ட விற்பனைக்கு இருக்கு. தமிழ்நாடு தாண்டி பக்கத்து மாநிலங்களிலும் கூட இந்த டெகர்களைக் கேட்டு வாங்கறாங்க. என் கணவர், மற்றும் என் குடும்பம் மொத்தமும் நிறைய சப்போர்ட் செய்யறாங்க. மாதந்தோறும் ரூ. 10,000 துவங்கி ரூ.15,000 வரையிலும் வருமானம் கிடைக்கிறது. வீட்டில் சும்மா பொழுது போக்கிற்காகவும், என்னுடைய மன திருப்திக்காகவும்தான் இந்த ஓவியங்களைக் கத்துக்கிட்டேன். ஆனால் அதன் மூலம் ஒரு வருமானம் வரும்போது சந்தோஷமா இருக்கு.
– ஷாலினி நியூட்டன்

Related posts

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்

குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!