வருமானம் அள்ளித்தரும் வடகாடு மிளகு!

இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு, இங்கு விளையும் மிளகு பிடித்தமான ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. நல்ல மணத்துடன், காரமாக இருக்கும் நம் நாட்டின் மிளகு மருத்துவக்குணமும் நிறைந்ததாக இருக்கிறது. இதனால் அவர்கள் இந்திய மிளகை அதிகளவில் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். இதற்காக இந்தியாவில் மிளகுக்கு தட்டுப்பாடு கூட ஏற்பட்டதாக கூறுவார்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மிளகு இந்தியாவில் மலைப்பிரதேசங்களில்தான் பெரும்பாலும் விளையும். குறிப்பாக கேரளா போன்ற மலைப்பிரதேசங்களில்தான் செழித்து வளரும். தமிழகத்திலும் சில மலைப்பிரதேசங்களில் விளையும். ஆனால் இப்போது அதிகளவில் சமவெளிப்பகுதிகளிலும் மிளகு செழித்து வளர்கிறது. அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மிளகு சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்படுகிறது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில் தனது தென்னந்தோப்புக்கு இடையில் மிளகைப் பயிரிட்டு, அசத்தலான லாபம் பார்த்து வரும் முன்னோடி விவசாயி பாலுசாமி என்பவரை சந்தித்தோம்.

“டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். 1975ம் ஆண்டில் கேரளாவின் பலோடு பகுதியில் உள்ள பேப்பர் கம்பெனியில் இன்ஜினியராக பணிக்கு சேர்ந்தேன். அலுவலகத்திற்கு அருகில் விவசாயிகளுக்கு சொந்தமான தோட்டங்களில் மிளகு பயிரிடப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். கேரளாவைச் சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் மிளகுக்கொடி பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். மிளகில் கிடைக்கும் லாபம் குறித்து அவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். எதிர்பார்க்காத அளவிற்கு லாபம். பூர்வீகமாக விவசாய குடும்பத்தை சேர்ந்த நாம் ஏன் நம்முடைய நிலத்தில் மிளகு பயிரிடக்கூடாது என்ற எண்ணம் வந்தது. அதனால் எனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் மிளகு பயிரிடலாம் என முடிவு செய்தேன்.

1988ம் ஆண்டில் மிளகினை எனது நிலத்தில் பயிரிட்டேன். பலோடு பகுதியில் உள்ள விவசாயியிடம் இருந்து மிளகு நாற்றுகளை வாங்கி வந்தேன். நாற்று ரூ.2 என்ற கணக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடி, செடி வகை மிளகு நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தேன். ஏற்கனவே தென்னை மரம் இருந்ததால், அதில் ஊடுபயிராக மிளகினை நடவு செய்தேன். கொடி மிளகு வகையைப் பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு 340 நாற்றுகள் வரை தேவைப்படும். இவற்றை 1.5 அடி அகலம் 1.5 அடி நீளம் 1.5 அடி குழி தோண்டி நடவு செய்வோம். இரண்டு கொடிகளுக்கு இடையில் 12 அடி இடைவெளி இருக்கும் அளவிற்கு நடவு செய்வது அவசியம்.

நடவு செய்யும்போது மட்டுமே 4 முறை உழவு ஓட்டினேன். தற்போது 30 வருடங்களுக்கும் மேலாகிறது. பராமரிப்பு தவிர வேறு எதுவும் செய்வது கிடையாது. இதிலிருந்து எடுத்த நாற்றுகளை வைத்தே மீதம் இருந்த 6 ஏக்கர் நிலத்தில் நடவு செய்தேன். நடவு செய்வதற்கு முன்பு இலை குப்பை, எரு உரம் உள்ளிட்டவற்றை இட்டு நடவு செய்வோம். கொடிகள் வைத்த ஏழாவது மாதத்தில் இருந்தே மிளகு வரத்தொடங்கிவிடும். இந்த தருணத்தில் பெரிய அளவில் விளைச்சல் இருக்காது. புதிய மிளகு ரகத்தில் கொடி வளர்ந்து ஒன்றரை ஆண்டில் காய் பிடித்து அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு1 கிலோ அளவில் மிளகு கிடைக்கும். 5 ஆண்டுகள் வளர்ந்த பின்னர் 5 கிலோ அளவில் காய்ந்த மிளகு கிடைக்கும். தொடர்ந்து 10 கிலோ அளவுக்கு அது உயரும்.

மிளகு கொடியில் மழைக்காலத்துக்கு முன்பும், பின்பும் தொற்று வராமல் இருப்பதற்கு இயற்கை உரமிட வேண்டும். அதற்கு நாங்கள் தொழு உரம் பயன்படுத்துகிறோம். பொதுவாகவே எந்த ஒரு கொடி, செடி வகை பயிர்களுக்கும் அதிகம் தண்ணீர் விடக்கூடாது. நீர் அதிகம் விடுவதால் அழுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இதனை தவிர்க்க நான் சொட்டு நீர்ப் பாசனைத்தை பயன்படுத்துகிறேன். ஒரு கொடிக்கு ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் மட்டுமே போதுமானதாக இருக்கும். உயரமான தென்னை, ரப்பர் மரங்களில் மிளகுக் கொடிகளை ஏற்றி வளர்த்தால் நீரால் அழுகாது.அதிகபட்சம் 12 அடி உயரம் வளர்த்தால் போதும். கீழே இருந்து மிளகை அறுவடை செய்யலாம். இந்த கொடிகள், கிளைகளாக பரவாமல் ஒரே நேராக வளர்ந்து செல்வதால் அதிகமான காய்கள் பிடிக்கும். செடியின் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதி வரை காய்கள் இருக்கும். பொதுவாக நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை மிளகு சீசனாக இருக்கிறது. இந்தக் காலங்களில் கொடிகளில் விளைந்த மிளகுத்தார்களைப் பறித்து, அவற்றில் இருந்து மிளகு முத்துகளை பிரித்தெடுக்கிறோம். தொடர்ந்து அவற்றை வெயிலில் உலர வைத்து விற்பனை செய்கிறோம்.

1 கிலோ மிளகை உலர வைத்து கழிவுகளை அகற்றினால் 300 லிருந்து 400 கிராம் வரை மிளகு கிடைக்கும். இதுமட்டுமின்றி செடி மிளகினையும் நடவு செய்துள்ளேன். இந்த ரகத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு 680 நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்றிற்கும் மற்றொரு நாற்றிற்கும் இடையில் 6 அடி இடைவெளி இருக்கும் அளவிற்கு செடிகளை நடவு செய்வோம். பழைய மிளகுக் கொடிகளில் வீரியம் மிக்க கிளைகளை எடுத்து, அதனை துண்டாக்கி பதியம் செய்து, செடிகளை உற்பத்தி செய்கிறோம். அதிகபட்சம் 5 அடி உயரத்திலேயே இந்தச் செடிகள் வளர்ந்து மகசூல் கொடுக்கும். இந்த மிளகுச் செடிகள் ஆண்டு முழுவதும் காய் காய்க்கும் திறனுடையது. ஒரு செடி நடவு செய்த 6 மாதங்களில் காய் காய்க்கத் தொடங்கும். 3வது ஆண்டில் ஒன்றரை கிலோவில் தொடங்கி 3 கிலோ வரை மிளகு விளையும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நேர்த்தியான கொடி, செடி மிளகில் இருந்து ஆண்டுக்கு ஒரு டன் வரை மிளகு கிடைக்கும். நாங்கள் தற்போதுதான் 5 ஏக்கர் நிலத்தில் புதிதாக கொடி, செடி மிளகுகளை விரிவுப்படுத்தியுள்ளோம். தற்போது எங்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் இருந்து சராசரியாக 2.3 டன் (2300 கிலோ) மிளகு கிடைக்கிறது. இதனை நாங்களே நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். தஞ்சாவூர், புதுக்கோட்டை, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தமாக மிளகுகளை அனுப்பி வைத்து விற்பனை செய்கிறோம். செல்போனில் தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுப்பவர்களுக்கு பார்சல் மூலமாகவும் மிளகினை அனுப்பி வைக்கிறோம். ஒரு கிலோ மிளகு ரூ.800 என்ற கணக்கில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதன்மூலம் ஒரு வருடத்திற்கு ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் வண்டிக்கு கூலி, பராமரிப்பு செலவு, ஆட்களுக்கான கூலி ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் போக ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. மிளகுச் செடியைப் பொறுத்தவரையில் 30 ஆண்டுகளுக்கு மேல் நல்ல மகசூல் கிடைக்காது என்று சொல்வார்கள். ஆனால் நான் 32 வருடங்களுக்கு முன்பு வாங்கி வந்து நடவு செய்த மிளகுக்ட கொடியில் இருந்து தற்போது வரை நல்ல மகசூல் எடுத்து வருகிறேன்’’ என்கிறார் பாலுசாமி.
தொடர்புக்கு:
பாலுசாமி: 97860 29011

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்