வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து: குற்றவாளி என குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக நாளை நேரில் ஆஜராகும்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பொன்முடி. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து 2016ல் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் 2017ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில், பொன்முடி, விசாலாட்சி ஆகியோரது வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவைகளுடன் 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அவை குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று வாதிடப்பட்டது.

அமைச்சர் பொன்முடி தரப்பில், ‘‘மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தனியாக வணிகமும் செய்வதால், அதன் மூலமும் வருமானம் அவருக்கு கிடைக்கிறது. இவற்றை எல்லாம் புலன் விசாரணை அதிகாரி கணக்கில் எடுக்கவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை’ என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கில் நேற்று காலை நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த வருமானக் கணக்குகளின் அடிப்படையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்பு ஏற்க கூடியதாக இல்லை. வருமான வரித்துறைக்கு கணக்கை தாக்கல் செய்துள்ளார் என்பதற்காக விடுதலை செய்ய முடியாது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதல்ல. பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதம் சொத்துகளை சேர்த்தது நிரூபணமாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து ெசய்யப்படுகிறது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து டிச.21ம் தேதி (நாளை) முடிவு செய்யப்படும். பொன்முடி மற்றும் விசாலாட்சியிடம் தண்டனை குறித்து கருத்து கேட்கப்படும். அதற்காக அவர்கள் இருவரும் வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் இருவரும் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகலாம்” என்று நீதிபதி கூறியுள்ளார்.

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!