தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி தென் மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. எனவே அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வரத் தயாராக இருக்க வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்கள் மீட்பு மையத்தில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அவசரகால தடுப்பூசி, படுக்கைகள் உள்ளிட்டவை தட்டுப்பாடு இல்லாமல் தயார் நிலையில் இருப்பது முக்கியம்.

மருத்துவமனைகளில் ஜெனரேட்டர், போதுமான அளவு எரிபொருள்கள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மழைக்குப் பிறகு குடிநீர் சுத்தமாக வருகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். காய்ச்சல், தோல் வியாதி என வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். பாம்பு உள்ளிட்ட விஷக் கடியுடன் வரும் நபர்களுக்கு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு