புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறப்பு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன் வார்டு நிதியிலிருந்து ₹12.55 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தில் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்ட அறை, குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், சுவர்களில் பல்வேறு படங்கள் உள்ளிட்ட வசதி அமைக்கப்பட்டது. இந்த மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ ஜேஜே.எபினேசர் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதேபோல், புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் உள்ள பெரியார் பூங்காவில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் எம்எல்ஏ எபினேசரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹10 லட்சம் ஒதுக்கி திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் முன்னிலையில் நேற்று நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த உடற்பயிற்சி கூடம் விரைவில் கட்டப்பட்டு, இளைஞர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று எம்எல்ஏ கூறினார். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் தேவி, திமுக பகுதிச் செயலாளர் லட்சுமணன், அவை தலைவர் வெற்றிவீரன், அனிபா கதிரேசன், கஜேந்திரன், வழக்கறிஞர் ரவி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்