இனாம் கவரில் ஓபிஎஸ் போட்டோ இருந்ததால் இலை கட்சியில் அதிர்ச்சி அடைந்தவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தன்னை யாரும் தொட முடியாது என்று சவால் விட்டவர் ஜெயில் கம்பியை எண்ணிக் கொண்டவர், அவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு அமலாக்கத்துறையை வைத்து குடைச்சல் கொடுக்கும் வேலையை ஒன்றிய அரசு செஞ்சிக்கிட்டு வருது. இந்த வேலையை கவர்னர் பொறுப்பில் இருப்பவர்களும் செய்து வருவதுதான் இன்றைக்கு தமிழ்நாட்ல ஹாட் டாபிக். உச்சநீதிமன்றம் சூடு வச்சபிறகும் சிலர் இன்னும் திருந்தலையாம். இப்படித்தான் தொட்டுப்பார், தூக்கிப்பார் என மலராத கட்சியின் விளையாட்டு தலைவர் சவால் விட்டாராம். இவ்வாறு உதார் விடுவதன் மூலம் தன்னை ஒரு தலைவனாக காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதுக்காக சட்டத்தை தனது கையில் எடுத்துக்கிட்டு அளவில்லாமல் ஆடியிருக்காரு. ஒரு கட்டத்துல சட்டம் அதன் கடமையை அமைதியா செஞ்சதினால அந்த விளையாட்டு தலைவர் புழல் சிறையில் அடைப்பட்டு நாலு சுவற்றுக்குள் உலவி வந்தாராம். அங்கும் ஜெயில் அதிகாரிகள் பயப்படுவார்கள் என நினைச்சிருக்காரு. ஆனால் சிறையின் விதிப்படி கைதிகளுக்கு என்ன செய்யணுமோ அதை அதிகாரிகள் செஞ்சிருக்காங்க. கடைசியில கக்கூஸ் சரியில்லைன்னு ஒரு குண்டை உருட்டி விட்டிருக்காரு. 150 பேருக்கு ஒரு கக்கூஸ்தான் இருக்குன்னு சொல்லியிருக்காரு. ஆனா 8 பேருக்கு ஒரு கழிவறை இருக்குன்னு புள்ளிவிவரத்தோட அதிகாரிகள் பதில் சொல்லியிருக்காங்க. எந்தபக்கம் பால் போட்டாலும் அடிக்கிறாங்களேன்னு ஷாக்கான விளையாட்டு தலைவர், ஜெயிலைபத்தி ஒன்றிய அரசுக்கு ரிப்போர்ட் கொடுக்கப்போறேன்னு கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு கதை விட்டிருக்காரு. ‘‘தன்னை யாரும் தொடமுடியாதுன்னு நினைச்சிக்கிட்டிருந்தவரை புழலுக்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்காங்க. அந்த பயத்துலதான் தற்போது வாயால் வடை சுடுறார்…’’ என்றனர் சிறை துறையினரும் தாமரை கட்சி நிர்வாகிகளும் என்றார் விக்கியானந்தா.
‘‘வளம் கொழிக்கும் கோவையில லஞ்ச பணத்தில் வளமாக இருக்கும் அதிகாரிகள் எந்த துறையில் இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆபீசில் சிலர் செமத்தையா கல்லா கட்டுறாங்களாம். ஆட்டோமொபைல்ஸ், பம்பு, கிரைண்டர், கிரஷர், பவுண்டரி, குவாரி என தொழிலுக்கு ஏத்த மாதிரி பட்டியல் போட்டு, வசூல் குவிக்கிறாங்களாம். காற்று மாசு, நிலம் மாசு, ஒலி மாசு என 3 வகையான கேட்டகிரியிலும் இவங்களது வசூலை தடுக்க முடியலையாம். கம்பெனி விரிவாக்கத்திற்கும் கப்பம் கட்ட வேண்டுமாம். எந்த விவரமா இருந்தாலும் ஆபீசுல வெச்சு பேசமாட்டாங்களாம். இதுக்கு சில புரோக்கர்கள வெச்சு இருக்காங்க. அவுங்கதான் அனுமதி ஆர்டர் வாங்கி தருவாங்களாம். கோவை லஞ்ச ஒழிப்பு ஆபீசு பக்கத்துல இருக்கிற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆபீஸ், மண்டல ஆபீஸ் என இரண்டிலும் ஏகப்பட்ட கெடுபிடியாம். தனியார் செக்யூரிட்டிகளை நியமித்து, யாரும் ஆபீசுக்குள்ள வர விடாம தடுக்கிறாங்களாம். ஆன்லைன்ல விண்ணப்பத்தை அனுப்புங்க… சந்தேகம் வந்தா கூப்பிடுகிறோம்… என கறாராக கூறி விடுகிறார்களாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கிற கம்பெனிகளை கண்டுக்காம விட்டுவிட தனி சார்ஜ் வசூலிக்கிறாங்களாம். நேர்மையா தொழில் நடத்த லஞ்சம் கொடுத்துதான் அனுமதி சான்று பெற வேண்டியுள்ளதுன்னு தொழில்முனைவோர் புலம்புறாங்க… இப்படியே போனா கோவை தொழில் நலிவடைந்த நகரமாக மாறிவிடும் என்கின்றனர் சிறு தொழில் செய்யும் முதலாளிகள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செமத்தையான செம்மரக்கட்டை சிக்கும்போது, கடத்துபவர்கள் சிக்குவது இல்லை என்ற தகவல் எங்கயே இடிக்குதே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல குடியேற்றத்துல இருக்குற வனப்பகுதியானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகான்னு 3 மாநிலத்தையும் இணைக்குற பெரிய வனப்பகுதியாம். இங்க இயற்கை அழகோட மரங்கள் செழித்து வளர்ந்து இருக்குது. இதுல செம்மரங்களும் நல்லாவே வளர்ந்திருக்குதாம். தரமான செம்மரமாக இருக்குறதால, சமூகவிரோத கும்பல்கள் அங்க இருந்து மரங்களை வெட்டி காட்டுவழியாகவே ஸ்டேட் விட்டு, ஸ்டேட் கடத்துறாங்களாம். அதேபோல ஆந்திராவுல இருந்தும் வெட்டி சொகுசு கார்கள்ல கடத்துறாங்களாம். இதுல பெரும்பாலான செம்மரக்கடத்தல்ல கார்களும், கட்டைகளும்தான் சிக்குதாம். ஆட்கள் யாருமே சிக்கமாட்டேங்குறாங்களாம். காரணம் ஒருசில பாரஸ்ட் ஆபிசர்ஸ்களும், காக்கிகளும் கட்டைகளை மட்டும் பிடிச்சிட்டு, கடத்துனவங்கள விட்டுவிடுறதாக புகார் குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது. இதனால குடியேற்றம், காட்டுப்பாடி, சேருகாடுன்னு எல்லையோரங்கள்ல சோதனைய பலப்படுத்தப்போறாங்களாம்… பல லட்சம் செம்மரக்கடையில் கிடைப்பதால, சும்மா நாலு காந்தி நோட்டை காடு காக்கும் அதிகாரி, சட்டம் காக்கும் அதிகாரிகளுக்கு கொடுத்துவிட்டு தங்கள் தொழிலை கடத்தல்காரங்க செமையா செய்யறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூட்டு நகரமே தீபாவளி காலத்தில் விழித்து கொண்டிருந்தது எப்படி…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தீபாவளி பண்டிகைக்காக அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனாம் மற்றும் இனிப்புகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இலைக்கட்சியின் மாஜி மந்திரியான உளறல்காரர், தனது கட்சியின் வார்டு கிளைச் செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளி இனாம் வழங்கினார். இதில் பெரிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து கட்சி வேஷ்டி, இனிப்புகளுடன் இனாம் வழங்கினார். தொண்டர்களை தனது சட்டமன்ற அலுவலகத்திற்கு வரவைத்து ரூ.300, ரூ.500, ரூ.1,000 என தரம் பிரித்து ஒவ்வொருவருக்கும் வழங்கினார். ஆவலுடன் தொண்டர்கள் அந்த இனாம் கவரை பிரித்து, அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு கவரை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். காரணம், அந்தக் கவரில் இலைக்கட்சியின் பொதுச்செயலாளரான சேலத்துக்காரர் படங்களோடு, தேனிக்காரர் படமும் இடம் பெற்றிருந்ததாம். ‘ஏற்கனவே உளறி கொட்டி சேலத்துக்காரரிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்கிறார் மாஜி மந்திரி. இதில் தேனிக்காரர் படத்தையும் சேர்த்து பிரிண்ட் செய்த கவர் வாங்கி இருக்கிறாரே’ என தொண்டர்கள் தலையில் அடித்துக் கொண்டனர். இதுகுறித்து ஆதரவாளர் ஒருவர், மாஜி மந்திரியிடம் தெரிவிக்க, அடுத்தடுத்த நாட்களில் விட்டுப் போனவர்களுக்கு வழங்கிய இனாம் கவர்களில் தேனிக்காரர் படத்தை கருப்பு மை பூசி அழித்திருக்கிறார்கள். தவறுதலாக நடந்து விட்டது என சேலத்து தலைமையிடம், தனக்கு நெருக்கமானவர்களை வைத்து கூறி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!