பெரியகுளம் மலைப்பகுதியில் காட்டுத்தீயால் வனங்கள் அழியும் அபாயம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரியகுளம்: தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்காலங்களில் பெரியகுளம் பகுதியில் அடுக்கம்-கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் போடிமெட்டு மலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும். அதுபோல், கோடைக்காலங்களில் பெரியகுளம், மூணாறு, போடி குரங்கணி போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும் தொடர்கதையாக உள்ளது.

பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காட்டுத்தீ எரிய தொடங்கி தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த காட்டுத் தீ யானது 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான இடங்களில் பரவியதால் வனப்பகுதியில் இருந்த மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் சிறிய வகை வன உயிரினங்கள் தீயில் கருகி பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை உடனடியாக அணைக்க வேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது வெயில் காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவும். பகல் மற்றும் இரவு நேரங்களில். எரியும், காட்டுத்தீயினால். அடிவாரப் பகுதிகளில். விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வனத்துறையினர் இப்பகுதிகளை கண்காணித்து. விட்டு விட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் துவங்கவுள்ளதால், இப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை அணைக்க தேவையான உபகரணங்களை வனத்துறையினருக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி