விசாரணை என்ற பெயரை வைத்துக்கொண்டு அமலாக்கத்துறை எல்லை மீறி நடக்கிறது: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மணல் குவாரி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாகத்துறை வழங்கிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘மாவட்ட ஆட்சியர்கள் அரசின் ஒரு அங்கம் ஆவார்கள். அதனை அடிப்படையாக கொண்டு தான் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.மேலும் மணல் குவாரி விவகாரத்தில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடந்து வருகிறது. மேலும் மணல் குவாரி விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்காக தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இதில் சம்மந்தம் எதுவும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பினால் அவர்களால் எப்படி ஆஜராக முடியும். இவ்வாறு செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது. குறிப்பாக விசாரணை என்ற பெயரை வைத்துக் கொண்டு அமலாக்கத்துறை அவர்களுக்கான எல்லையை மீறி நடந்து கொள்கின்றனர். மேலும் மணல் குவாரி தொடர்பாக எந்தவித புகாரோ அல்லது எப்.ஐ.ஆரோ இல்லாத போது அமலாக்கத்துறை எதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். குறிப்பாக இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையானது சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு ஒன்றானதே கிடையாது. மேலும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவானது விசாரணைக்கு உகந்ததா என்பது தொடர்பாக ஒரு சிறய மனு தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜீ, ‘‘தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான வழக்கு உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு சட்ட விரோத மணல் விவகாரத்தில் அமலக்கத்துறை விசாரணை செய்ய முடியும் குறிப்பாக முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் மணல் குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளார். எனவே அமலாகத்துறையால் எப்படி தலையிடாமல் இருக்க முடியும். குறிப்பாக இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு காப்பாற்ற நினைக்கிறது. மேலும் மணல் குவாரி உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற அமலக்கத்துறை அதிகாரியை நாங்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்காக இந்த மணல் குவாரி விவகார வழக்கின் முழு விவரமும் வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையிடம் கேட்டும் தற்போது வரையில் விவரம் வழங்கப்படவில்லை. மேலும் இந்த வழக்கு தொடர்பாக எங்களது தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் இன்று (நேற்று) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் விசாரணையை நாளை(இன்றைக்கு) ஒத்திவைக்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு