வாடிக்கையாளர்களிடம் பல கோடி மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி. குழும நிறுவனத்தில் மீண்டும் ரெய்டு: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி; முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: வாடிக்கையாளர்களிடம் பலகோடி மோசடி செய்தது தொடர்பாக, ஏஆர்டி குழும நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கின. சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஏஆர்டி நிறுவனம் நகைக்கடை, மால் மற்றும் டிரஸ்ட் என்று பல நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதன்மூலம் பொதுமக்களிடம், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் வழங்கப்படும் என்று ஆசைவார்த்தை கூறி, ஏராளமான முதலீடுகளை பெற்று சுமார் ரூ.5.36 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, நொளம்பூர் போலீசார், ஏ.ஆர்.டி தங்க கடை உரிமையாளர் ஆல்பின் ஞானதுரை, ராபின் மற்றும் ஊழியர்கள் பிரியா, வீமா, சமீர் மற்றும் ஜவகர் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து, புழல் பகுதியை சேர்ந்த பிரியாவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.டி நகைக்கடையில், பணம் இழந்த வாடிக்கையாளர்கள் நொளம்பூர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏஆர்டி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆல்பின் ஞானதுரை, ராபின் ஆகியோருக்கு சொந்தமான அண்ணாநகர், திருமங்கலம், நொளம்பூர், முகப்பேர் உள்பட 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் எவ்வளவு பணம் மோசடி நடந்துள்ளது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்