தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் வேன் ஏற்றி ராணுவ வீரர் கொலை: ஓராண்டுக்கு பின் மனைவி, மகன் உட்பட 5 பேர் கைது


திருமங்கலம்: தகாத உறவை கண்டித்த ராணுவ வீரரை வேன் ஏற்றி கொலை செய்த மனைவி, மகன் உள்பட 5 பேரை போலீசார் ஓராண்டிற்கு பின் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம், அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறையில் வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்.3ம் தேதி, திருமங்கலத்தினை அடுத்த விடத்தகுளம் பகுதியில் டூவீலரில் சென்றபோது வேன் மோதி உயிரிழந்தார்.

விசாரணையில் தர்மலிங்கம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி கள்ளிக்குடி அருகே கல்லணை கிராமத்தினை சேர்ந்தவர். இவரும், பக்கத்து கிராமமான உலகாணியை சேர்ந்த பால்பாண்டியும் காதலித்துள்ளனர். ஆனால் ஜோதியை அவரது பெற்றோர் தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பின்பும் பால்பாண்டியுடன் ஜோதி நெருங்கி பழகியுள்ளார். இதனையறிந்த தர்மலிங்கம், ஜோதியை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதி அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதில் தாய்க்கு உதவியாக 18 வயது மகன் செயல்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து விடுமுறையில் ஊருக்கு வந்த தர்மலிங்கம் டூவீலரில் சென்றபோது, பால்பாண்டியின் தம்பி உக்கிரபாண்டி ஏற்பாட்டில் மினிவேன் டிரைவர் சிந்தாமணியை சேர்ந்த பாண்டி(40), கிளீனர் அருண்குமார்(38) ஆகியோர், வேன் ஏற்றி தர்மலிங்கத்தை கொலை செய்துள்ளனர்.

விபத்து ஏற்படுவதற்கு முன்பு தந்தை தர்மலிங்கத்துடன் டூவீலரில் சென்ற மகன் சம்பவ இடத்திற்கு முன்பாக இறங்கியுள்ளார். இதன்பின்பே வேன் மோதி தர்மலிங்கம் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது’’ என்றனர். இதனைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றிய திருமங்கலம் தாலுகா போலீசார், ஜோதி, அவரது 18 வயது மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்