471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: 471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 471 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை வெளியே வந்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதியை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!