திருவாரூர் அருகே சொத்துக்காக மூதாட்டி வீட்டுக்குள் சிறை வைப்பு

* மனதை பதற வைக்கும் வீடியோ வைரலால் பரபரப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே சொத்துக்காக மூதாட்டி வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளார். மனதை பதற வைக்கும் வீடியோ வைரலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பழனித்துரை மனைவி ஜெயம் (65). இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இவர் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு வீட்டுடன் கூடிய கோயில் சொத்தும் மற்றும் வேறு இடங்களில் நிலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசுகள் யாரும் இல்லாததால், இவரது சொத்துக்களுக்கு மேல் ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர், உணவு கொடுத்து இவரை பராமரிப்பது போல இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் 6 வருடங்களுக்கு முன்பு மூதாட்டி ஜெயம் எங்கும் செல்லாத வகையில் அவரை பராமரித்து வந்த அவரது உறவினர் ஒருவர், மூதாட்டி ஜெயத்தை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சிறை வைத்து விட்டு, ஜன்னல் வழியாக சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

6 வருடங்கள் கடந்த நிலையில் மின்சாரம் இல்லாமல், குடிநீர் வசதி ஏதுமில்லாமல், ஜன்னல் வெளிச்சத்தில் பூட்டிய வீட்டில் அடைக்கப்பட்டதால் சரியான உணவு இல்லாமல் உடம்பில் உடை இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கேயே இயற்கை உபாதைகளை கழித்தும் அதே இடத்தில் உறங்கி வருகிறார். போதிய பராமரிப்பு இல்லாமலும் ஜெயம், உடல் மெலிந்து காணப்படுகிறார். மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றமும் வீசுகிறது.

இந்நிலையில் சிலர், மூதாட்டியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டர், எஸ்பி முதல் லோக்கல் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்றுவிட்டோம். இதுபோன்ற செயல் வெளிநாடு, வெளி மாநிலங்களில் நடந்து இருப்பதை சமூக வலைத்தளத்தில் பார்த்து இருப்போம். ஆனால் தற்போது நேரடியாக பார்க்கும் போது மனதை பதற வைக்கிறது என்றார்.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி