கரும்பு விளைச்சல் பாதிப்பால் வெல்லம் உற்பத்தி குறைந்தது: சிப்பத்திற்கு ₹100 விலை உயர்வு

சேலம்: கரும்பு விளைச்சல் பாதிப்பால் வெல்லம் உற்பத்தி குறைந்துள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் கடந்த மாதத்தை விட, நடப்பு மாதத்தில் சிப்பத்திற்கு ₹100 விலை கூடியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சேலம், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பாலைகள் உள்ளன. இந்த கரும்பாலைகளில் தினசரி ஆயிரம் டன்னுக்கு மேல் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட வடமாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது.

சேலத்தில் தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம், ஓமலூர், மேச்சேரி உள்பட பல பகுதிகளில் வெல்லம் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தை உற்பத்தியாளர்கள் வெல்லம் ஏலம் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடும் வெயில் காரணமாக கரும்பு விளைச்சல் குறைந்ததால் வெல்லம் ஆலைகளில் தற்போது உற்பத்தி சரிந்துள்ளது. அதனால் கடந்த மாதத்தைவிட நடப்பு மாதத்தில் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் வெல்லம் வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்திலேயே மிகப்பெரிய வெல்லம் மண்டி சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் தெருவில் தான் உள்ளது. மேலும் நாமக்கல், பவானி உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் மண்டி உள்ளது. சேலம் வெல்லம் மண்டிக்கு தினசரி 80 முதல் 100 டன் வெல்லம் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் வெல்லத்தை சேலம் சுற்று வட்டார வெல்ல வியாபாரிகள், சென்னை, கோவை, மதுரை மற்றும் வடமாநில வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.

கடந்த பொங்கல் பண்டிகையின்போது கரும்பு வரத்து அதிகரித்து இருந்ததால் வெல்ல ஆலைகளில் வழக்கத்தை காட்டிலும் உற்பத்தி இருமடங்காக அதிகரித்து இருந்தது. கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட கடும் வெயில் காரணமாக கரும்பு விளைச்சல் சரிந்துள்ளது. இதனால் ஆலைகளுக்கு வழக்கமாக வரவேண்டிய கரும்பு வரத்து சரிந்தது. இதனால் வெல்ல ஆலைகளில் உற்பத்தி குறைந்து, மண்டிகளுக்கு கடந்த ஒரு மாதமாக வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக வெல்லம் விலை கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் அதிகரித்துள்ளது.

வெல்லம் வரத்து சரிவால் ஏலத்திற்கு வரும் வெல்லம் உடனடியாக விற்பனைக்கு சென்றுவிடுகிறது. கடந்த மாதம் 30 கிலோ கொண்ட சிப்பம் ₹1,340 முதல் ₹1,400 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது சிப்பத்திற்கு ₹100 அதிகரித்து, ₹1440 முதல் ₹1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் கிலோவுக்கு ₹3 முதல் ₹4 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை தற்காலிகம் தான். எதிர்வரும் மாதங்களில் நல்லமுறையில் பருவமழை கைகொடுத்தால் கரும்பு விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகரிக்கும். அப்போது விலையும் சிப்பத்திற்கு ₹100 முதல் ₹150 வரை சரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

 

Related posts

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!