வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால், உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் நீதிபதிகள் அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், சிவக்குமார், செல்வம் மற்றும் எஸ்.விமலா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோருக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதி நேற்று அனுப்பி வைத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றது.

இதுகுறித்த புகார்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு சென்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நடந்து முடிந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சு இருந்தது. ஆனால் இறுதி வரையில் தேர்தல் ஆணையம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறாமல் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதேப்போன்று தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் சிக்கலோ அல்லது குளறுபடியோ ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு