சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக மும்பை நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை விசாரணை

சென்னை: மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்டர்நேஷ்னல் டிரேட் லிங்க் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான எழும்பூர், திருவிக நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிராதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு ‘இன்டர்நேஷ்னல் டிரேட் லிங்க்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை எழும்பூர், திருவிக நகர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அடுக்கமாடி குடியிருப்பில் இயங்கி வரும் அலுவலகம், திருவிக நகர், காமராஜர் நகர் 1வது தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மார்ட்டின் மற்றும் ஜான்சன் வீடுகள் மற்றும் பெரம்பூரில் உள்ள அலுவலகம் மற்றும் பழவந்தாங்களில் வீரமாமுனிவர் தெ ருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் வீடு, பழவந்தாங்கல் பூந்தோட்ட தெருவில் வசிக்கும் ஹெலன் சாமுவேல் என்பவர் வீடு என மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடந்தது. குறிப்பாக திருவிக நகர் பகுதியை சேர்ந்த மார்ட்டின் மற்றும் ஜான்சன் ஆகியோர் பெரம்பூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் முக்கிய பொறுப்பாளராக உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு பெண் அதிகாரிகள் உட்பட 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து தனியார் நிறுவன அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்த பிறகு தான் சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் முழுமையாக தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

* சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து தனியார் நிறுவன அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது