சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நேற்று உத்தரவு பிறப்பிக்கபடும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் புதிதாக இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். அந்த மனுக்களில், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால், அந்த ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும். வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த இரு மனுக்களுக்கும் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பு நேற்று ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை கையெழுத்திட்டு அவர் பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Related posts

6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

11வது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: முதல் போட்டியில் இன்றிரவு மோகன் பகான்-மும்பை மோதல்

‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு