11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சென்னை ஐஐடியின் ஆன்லைன் பயிற்சி

தொழில்நெறி அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 8 வாரப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இதுவரை 500 பள்ளிகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பதிவு செய்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘தரவு அறிவியல்- செயற்கைத் தொழில்நுட்பம்’, ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

பள்ளி மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன், சென்னை ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இப்படிப்புகளின் மூலம் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தொழில்நெறி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்தத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் வகையில் மாணவர்களுக்கான அறிமுகப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் உயர்கல்வி, தொழில்நெறி ஆகியவை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து முடிவெடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.

அடுத்த தொகுதி 21 அக்டோபர் 2024 அன்று தொடங்குவதையொட்டி, அதற்கான விண்ணப்பப் பதிவுகள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்பட விரும்பும் பள்ளிகள் https://school-connect.study.iitm.ac.in என்ற இணைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தகவல்

ஈஷா யோக மையம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: ஈஷா அறக்கட்டளை

பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் கிலாஃபத் நகர் பகுதியில் குண்டு வெடிப்பு: 7 சிறுவர்கள் காயம்