இடுக்கி அணையில் பாதுகாப்பு குளறுபடி ராணுவ உளவுத்துறை விசாரணை துவக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள செறுதோணி மிகப்பெரிய அணையாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த அணையை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு. ஆனால் அணையில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்தநிலையில் கடந்த ஜூலை 22ம் தேதி பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 4 பேர் அணையை சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது பாலக்காட்டை சேர்ந்த நபர் அணையில் அனுமதி இல்லாத இடங்களுக்கு சென்று அங்குள்ள 12 கதவுகளை தாழ்ப்பாள் போட்டு பூட்டினார்.

மேலும் அணையின் ஷட்டரை திறப்பதற்கும், மூடுவதற்கும் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளில் அமிலத்தை ஊற்றியுள்ளார். இதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டார். சில நாள் கழித்து அணையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தபோது தான் இந்த விவரம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே அதிகாரிகள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் பாலக்காட்டை சேர்ந்த நபர் சமீபத்தில் வெளிநாடு சென்றது தெரியவந்தது. இதனால் அவர் தீவிரவாதியாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை வெளிநாட்டில் இருந்து வரவழைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ராணுவ உளவுத்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது. அணைக்கு கடற்படையும் பாதுகாப்பு அளித்து வருவதால் தான் ராணுவ உளவுத்துறை விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

பெண் டாக்டர் தற்கொலை

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி