போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை முறைப்படுத்த சிறப்பு அதிகாரியை உடனே நியமித்த தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: உரிமை கோராத வாகனங்களை ஒப்படைக்க உத்தரவு

மதுரை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்களை முறைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த நாகூர் கனி, கஞ்சா கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தனது ஜீப்பை, ஒப்படைக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்துவது தொடர்பான சிறப்பு அதிகாரியாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டது. டிஜிபி தரப்பு அறிக்கையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளின் நிலை குறித்து விபரங்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்ய வேண்டும் என்ற உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டுமென போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 3,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

191 வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,787 வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இதில், 1,467 வாகனங்களை நீதிமன்றம் மூலம் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,320 வாகனங்கள் பின்னர் ஏலம் விடப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி, நீதிமன்ற உத்தரவை ஏற்று பறிமுதல் வாகனங்களை முறைப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியை உடனடியாக நியமித்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதேபோல், பறிமுதல் வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை அழிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர், உரிமை கோரப்படாத வாகனங்களை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட எஸ்பிக்கள் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் எனக்கூறி விசாரணையை நவ.21க்கு தள்ளி வைத்தார்.

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!