ஐகோர்ட் எழுப்பும் கேள்விகளுக்கு துறை செயலாளர்கள் பதிலளிக்க சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: தலைமை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களோ, தலைவர்களோ தான் பதிலளிக்க வேண்டும்’ என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வருவாய் துறையில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஜெயராம் என்பவர், மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனால், பதவி உயர்வுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

இதையடுத்து, அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்ததற்காக பதவி உயர்வு வழங்கும்படி உரிமை கோர முடியாது என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயராமன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர், 41 துணை ஆட்சியர்களின் பெயர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வு பட்டியலில் இருந்த நிலையில் 10 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கம் அரசுதரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கத்தில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கப்படவில்லை. துறை செயலாளர் விளக்கம் அளித்திருந்தால் நீதிமன்ற கேள்விக்கு பதிலளித்திருப்பார். எனவே, உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களோ, துறை தலைவர்களோ மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்கவேண்டும் என்று பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை!!

மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!