ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம், ரூ.20 கோடி முதல் பரிசு, ரசிகர்கள் கொண்டாட்டம்

பார்படாஸ்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 20 ஓவர் உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியுடன் நேற்று மோதிய இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய 9வது டி20 உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன.

இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறின. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறிய நிலையில், கற்றுக்குட்டி அணியான அமெரிக்கா சூப்பர்-8ல் இடம் பிடித்து சாதனை படைத்தது. சூப்பர்-8 சுற்றின் முடிவில் முதல் பிரிவில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், 2வது பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து அணிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

ஆப்கான் அணி முதல் முறையாக உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது. முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது. 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன் வித்தியாசத்தில் பந்தாடிய இந்திய அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் நேற்று மோதின.

இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. அதிகபட்சமாக கோஹ்லி 76 ரன் விளாசினார். அக்சர் 47, துபே 27 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அந்த அணியில் அதிகபட்சமாக கிளாஸன்52, டி காக் 39, மில்லர் 21 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஹர்திக் 3, பும்ரா, அர்ஷ்தீப் தலா 2, அக்சர் ஒரு விக்கெட் கைப்பற்றினர். 2007ல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடியும், பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு ரூ.10 கோடியும் பரிசளிக்கப்பட்டது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

* பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சாம்பியன்ஸ். நமது அணி டி20 உலகக் கோப்பையை சிறப்பாக நாட்டிற்கு கொண்டு வந்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் மென் இன் ப்ளூ அவர்களின் இரண்டாவது டி20 உலகக்கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி! நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள், இந்திய அணி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு…
* இந்திய அணி ஒட்டுமொத்தமாக 6 ஐசிசி டிராபிகளை வென்றுள்ளது.

* 1983 மற்றும் 2011ல் ஐசிசி ஒருநாள் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம்.

* 2002 மற்றும் 2013ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம்.

* 2007 மற்றும் 2024ல் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் சாம்பியன்.

* கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் கோப்பையை முத்தமிட முடியாமல் தவித்து வந்த இந்திய அணி, ரோகித் தலைமையில் டி20 உலக கோப்பையை கைப்பற்றி இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்துள்ளது.

* கபில்தேவ், எம்.எஸ்.தோனியை தொடர்ந்து உலக கோப்பையை வென்ற 3வது இந்திய கேப்டன் என்ற பெருமை ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்துள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்