‘‘சினிமால எனக்கு எந்தப் பின்னணியும் கிடையாது!’’

நன்றி குங்குமம் தோழி

இயக்குனர் ஹலிதா ஷமீம்

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் தனித்த வெளிச்சம் கொண்டவை. சுதா கொங்கரா, புஷ்கர் காயத்ரி, சௌந்தர்யா ரஜினி, ஐஸ்வர்யா என பல பெண் இயக்குனர்கள் தமிழ் சினிமாவை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றனர். அந்த வரிசையில் கவனிக்கத்தக்க பெண் இயக்குனராக இருப்பவர்தான் ஹலிதா ஷமீம். 2014ல் பூவரசம்பீப்பி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்தவர், அடுத்தடுத்து சில்லுக்கருப்பட்டி, ஏலே எனும் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுவர்களுக்கான திரைப்படமாக இருந்தது இவரது பூவரசம்பீப்பி. அடுத்து சில்லுக்கருப்பட்டி இவரை வெகுதள ரசிக வட்டத்திற்கு கூட்டிச் சென்றது. தற்போது ‘மின்மினி’ எனும் திரைப்படத்தின் மூலம் திரையில் மின்னிக் கொண்டிருக்கும் ஹலிதாவை சந்தித்தோம்.

உங்களது இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்? பள்ளி, கல்லூரி எங்க படிச்சீங்க?

என் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம். பெரிய ஊராகவும் இல்லாமல் சின்ன ஊராகவும் இல்லாமல் ஒரு சின்ன டவுன்தான் எங்க ஊர். தாராபுரத்திலும் கொடைக்கானலிலும் எனது பள்ளிப்படிப்பை முடிச்சேன். சென்னையில் உள்ள கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா படிச்சேன். இளமைக்காலம் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்காக கொடைக்கானல், சென்னை போன்ற பெரிய நகரங்களில் கழிந்தது. அந்த ஊர்களில் வாழ்ந்த நினைவுகள்தான் எனக்கு இன்று வரை பல சுவாரஸ்ய நினைவுகளாக இருக்கு.

திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம்?

சினிமாவை பயங்கரமா ரசிக்காம சினிமா எடுக்கவே முடியாது. அப்படி, சினிமாவை ரசிக்க ஆரம்பிச்சதுதான் எனக்கு சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் கொடுத்தது. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல சினிமாவை வெறுமனே பார்த்தா மட்டும் போதாது. அதைத்தாண்டி நான் கத்துக்க நினைக்கிற விஷயங்கள் இருந்தது. வாழ்க்கையோட அனுபவங்கள், வாசிக்கிற புத்தகங்கள், கேட்கிற கதைகள், சந்திக்கிற மனிதர்கள் என பல விஷயங்கள் எனக்கு ஒரு அனுபவத்தை கொடுத்தது. அதுதான் என்னை சினிமா பக்கம் கொண்டு போனது. மனசுக்கு எது நெருக்கமா இருந்தாலும் அதை சினிமா மொழில செய்து பார்க்கனுங்கிற ஆர்வம் வந்தது. இப்படித்தான் சினிமாவுக்குள்ள வந்தேன்.

சாதாரண ரசிகையா சினிமா பார்ப்பதில் தொடங்கி இப்ப சினிமா இயக்குனர்… இந்தப் பயணம் எப்படி இருக்கு?

இப்பவும் நான் ஒரு சினிமா விரும்பி தான். ஆனால் இத்தனை ஆண்டு என்னுடைய சினிமா பயணத்தைப் பற்றி யோசிக்கும்போது பிரமிப்பாதான் இருக்கு. சினிமாவை பொறுத்தவரை எனக்கு எந்த பின்னணியும் கிடையாது. ஒரு எட்டு வருஷம் உதவி இயக்குனரா இருந்தேன். ஆனால் அந்தப் பதவிக்கு வர ஒன்றரை வருஷம் முயற்சி செய்தேன். இந்த முயற்சிகளுக்கு பிறகுதான் நான் இயக்குனராகி பத்து வருடமாகிறது.

அதனால சினிமாவும், சினிமாவுல என்னோட பயணமும் எப்ப நினைச்சுப் பார்த்தாலும் எனக்கு ஸ்பெஷல்தான். இன்னும் பல புதுமையான திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கு. சினிமா ரசிகரான என் படங்களை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கும் போது கூடுதல் மகிழ்ச்சியா இருக்கு.

எந்த திரைப்படம் உங்களுக்கு சினிமா கத்துக்கணும்ங்கிற ஆசைய கொடுத்தது?

சின்ன வயசுல இருந்தே எனக்கு டி.வில படம் பார்க்க பிடிக்காது. அதனால, அப்பவே தியேட்டருக்கு போய்தான் படம் பார்ப்பேன். புதுசா ரிலீஸ் ஆகிற எல்லா படங்களையும் தியேட்டரில் போய் பார்த்திடுவேன். அப்படி நான் பார்த்தது பெரும்பாலும் குடும்ப படங்கள்தான். அந்த சமயம்தான் மணிரத்தினம் சாரின் ‘உயிரே’ படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படம் பார்த்த பிறகுதான் சினிமாவோட மேஜிக் எனக்கு தெரிய ஆரம்பிச்சது. நான் இதுவரை பார்த்த எல்லா திரைப்படத்தில் இருந்தும் விலகி அது வேறொரு படமா தெரிஞ்சது. அதைத்தொடர்ந்து ‘அலை பாயுதே’. இந்தப் படத்திற்கு பிறகு நிறைய படங்களை தேடி பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப முடிவு செய்தேன், சினிமா மட்டும்தான் அதைத்தாண்டி வேற ஏதுமே இல்லை. வருங்காலத்தில் நானும் ஒரு இயக்குனரா ஆகணும்.

சினிமாவில் நீங்க வியந்து பார்க்கக்கூடிய ஆளுமை யார்?

சினிமாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நான் எப்பவும் மதிக்கிற ஆளுமை ‘சினிமா’ மட்டும்தான். சினிமாவில எனக்குப் பிடித்த ஆளுமை என யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியல. எல்லோராலும் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி அல்லது ஒரே ஐடியாவில் படங்களை எடுக்க முடியாது. ஒருத்தரோட ஒரு படம் ரொம்ப பிடிக்கும். அடுத்த படம் பிடிக்காம கூட போகலாம். எல்லோருக்குமே பிடிச்ச பக்கம், பிடிக்காத பக்கம்னு ரெண்டுமே இருக்கும். அதனால, சினிமாவில் ஆளுமையாக நான் யாரையும் சுட்டிக்காட்ட மாட்டேன்.

சினிமாவில் மேலும் கற்றுக்கொள்ள வேண்டியவை?

நான் பர்சனலாக சினிமால கத்துக்கணும் என்று நினைப்பது கதையை மையமாக வைத்து மட்டுமே சினிமா எடுக்கணும் என்பதுதான். ஒரு சினிமாவுக்கு எந்த வெளிப்புற தேவைகளும் இல்லாம அந்தப் படத்திற்கு தேவையான கதையை மட்டுமே சொல்லி, அந்தக் கதைக்காக அந்தப் படம் வெற்றி பெறணும். மலையாள சினிமாவை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருக்கும். கதையை நம்பி மட்டுமே படம் எடுக்கிறாங்கன்னு. மின்மினி படம் எடுப்பதற்கு முன் பார்வையாளர்களுக்கு பிடிக்கிற மாதிரி படம் எடுக்கணும்னு தோணுச்சு. இப்ப அப்படி இல்ல. கதைக்காக மட்டுமே என் படம் வெற்றி பெறணும். அப்படி ஒரு படம் எடுக்கணும் என்பதுதான் என் ஆசை. அதைத்தான் கத்துக்கணும்.

பொதுவெளியில் சொல்ல நினைப்பதை சினிமா மொழியில் சொல்ல முடியாதா?

கண்டிப்பா முடியும். என் சினிமா என் குரலாகத்தான் இருக்கும். என் மொழி, குரல் எல்லாமே சினிமாதான். நல்ல கருத்து மற்றும் விஷயங்களை எனக்குப் பரிட்சயமான சினிமா மொழியில் சொல்லிட்டு இருக்கிறேன். சோஷியல் மீடியால நாம நினைப்பதை சொல்லிடலாம். அது மட்டுமே பத்தாது. என் மீடியமான சினிமா வழியாக கருத்துகளை சொல்லணும்னு ஆசை. அதைத்தான் செய்திட்டு இருக்கேன். நான் நான்கு படங்களை இயக்கி இருந்தாலும், இந்த துறையில் இன்னும் முதல் படியில்தான் நிற்கிறேன். ஹலிதா, ஃபீல் குட் மூவி கொடுப்பாங்கன்னு ஒரு அடையாளம் ஏற்படுத்தி இருக்கேன். இது போன்ற படங்கள் மட்டும் இல்லாமல் வேறு விதமான படங்களும் கொடுக்கணும்.

சினிமா தவிர உங்களின் விருப்பம்?

எனக்கு டிராவலிங் பிடிக்கும். பயணம் செய்யணும்னு முடிவு செய்திட்டா என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சிட்டு ரெடியாகிடுவேன். என் மனசை எப்பவும் இளமையா
வைத்துக்கொள்ள ட்ராவல் மட்டும்தான் ஒரே வழி. புத்தகம் வாசிக்கவும் பிடிக்கும். புத்தகம் வாசிக்கும் போது எந்த தொந்தரவும் இல்லாமல், முழு மனசா வாசிக்க நினைப்பேன்.

ரீசன்ட் படம் மின்மினி?

நான் எடுத்தப் படத்துலேயே மின்மினி எனக்கு ரொம்ப ஃபேவரைட். இந்தப் படத்தின் முதல் படப்பிடிப்பு 2016ல் நடந்தது. அப்ப இதில் நடிச்சவங்க எல்லோரும் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தாங்க. அவங்கள வச்சுத்தான் படத்தின் முதல் பாதி எடுத்தேன். அதன் பிறகு ஆறு வருட இடைவெளிக்குப்பிறகு 2022ல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பண்ணேன். பள்ளியில் படிச்சிட்டு இருந்தவங்க இப்ப வளர்ந்துட்டாங்க.

இந்த ஆறு வருட இடைவெளி, சினிமாவை அதன் போக்கிலயே உண்மையாக எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். படம் பார்ப்பவர்களுக்கு மின்மினி பிடிக்குமா பிடிக்காதா என்று யோசிக்காம எடுத்தப்படம். ரொம்ப ஆத்மார்த்தமா ஒரு விஷயத்தை நம்பினேன். அதையே திரைப்படமா எடுத்தேன். அவ்ளோதான். அதனாலயே மின்மினி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ச.விவேக்

Related posts

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!

உன்னத உறவுகள்