ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி போலீஸ்..!

சென்னை: ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்தது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பணி தொடர்பாக இணை இயக்குநர் முருகன் அறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்பி ஒருவர் கையில் கோப்புடன் சென்றார். அப்போது ஐஜி முருகன் செல்போனில் தவறாக தன்னை படம் எடுத்ததாகவும், தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் பெண் எஸ்பி அப்பேதைய டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார்.

மேலும் 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் வரை தனக்கு பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்தாக அதே புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஏடிஜிபியாக இருந்த சீமா அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட விசாகா கமிட்டியினர் 2 தரப்பிடமும் விசாரித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் இந்த வழக்கு 2019ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. எனினும், சிபிசிஐடி போலீசார் பெண் எஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் ஐஜி முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரம், திமுக ஆட்சி தமிழகத்தில் வந்ததும், இந்த வழக்கை தமிழகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை எதிர்த்து ஐஜி முருகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் புகார் அளித்த பெண் எஸ்பி விருப்பப்படி கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

தற்போது முருகன் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி வருகிறார். ஐஜி முருகன் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் தமிழ்நாடு அரசிடமும் மற்றும் ஆளுநரிடமும் அனுமதி கோரி இருந்தனர். அதன்படி தமிழ்நாடு அரசும், ஆளுநரும் ஐஜி முருகன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்திருந்தனர். ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்தது. 6 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை