ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து அனுமதி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 3 நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடையில்லை என உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்திருந்தது. விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில் இன்று காலை முதல் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த பிறகு பூஜைகள் தொடங்கின. நாளை முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அதனால் இன்று நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம்போல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புரட்டாசி மாதத்தால் ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்: ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே சேல்ஸ்

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மக்களவை தேர்தல் முடிந்து நடந்த முதல் பேரவை தேர்தல்; அரியானா, ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை