ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கடத்தல்; 3,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது; கும்பலுக்கு வலைவீச்சு

பெரம்பூர்: சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உத்தரவின்படி, சிறப்பு தனிப்படைகள் அமைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்துவருபவர்கள் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் மற்றும் ஓட்டேரி ஆகிய இடங்களில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசி பயன்படுத்திய 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24ம் தேதி புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோடு பகுதியை சேர்ந்த ஜாகிர் (17) என்ற சிறுவன் போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்தான். இதனால் இவற்றை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெரம்பூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி போதை மாத்திரைவிற்பனையில் ஈடுபடுவதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தனிப்படை உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் கண்காணித்து வந்தனர். பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் வைத்து நேற்றிரவு அஜித் (எ) குணாநிதியை (24) கைது செய்தனர். பின்னர் இவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், இவர் மீது 10 குற்ற வழக்குகள் உள்ளதும் செம்பியம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளதும் தெரியவந்தது.

மேலும் இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமுல்லைவாயலில் ஒரு வீட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை பதுக்கிவைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சென்று திருமுல்லைவாயலில் அவர் கூறிய வீட்டில் இருந்து சுமார் 3,300 வலி நிவார மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். முகப்பேர் பகுதியை சேர்ந்த சங்கர் பாய் (27) என்பவர் வலி நிவார மாத்திரைகளை ஐதராபாத்தில் இருந்து வாங்கி அதனை அயப்பாக்கத்தை சேர்ந்த அலி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதன்பிறகு அலி, போதை மாத்திரைகளை அஜித் இடம் கொடுத்து விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து அஜித், தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் வலி நிவார மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார். ஐதராபாத்தில் இருந்து குறைந்தவிலைக்கு வாங்கிவந்து சங்கர்பாய் மூலம் கூடுதல் விலைக்கு அலிக்கு கொடுத்துள்ளார். இதன் மீது மேலும் சில தொகைவைத்து அஜித்துக்கு கொடுத்துள்ளார். இப்படியாக 3 கட்டமாக விலை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்துக்கு வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். இதுசம்பந்தமாக அஜித்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக முக்கிய நபர்கள் சங்கர் பாய், அலி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு