கணவருக்கு தெரியாமல் மறைப்பதற்காக கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொன்ற இளம்பெண்

சென்னை: கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை, கணவருக்கு தெரியாமல் மறைக்க, ஏரியில் வீசி கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி ஏரியில் நேற்று முன்தினம் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தை சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் பெண் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்தது யார் என அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர்.

அதில், பெண் ஒருவர், குழந்தையை ஏரியில் வீசி கொன்றது தெரிந்தது. விசாரணையில், வேளச்சேரி ஏரிக்கரை தெருவை சேர்ந்த சங்கீதா (23) என்று தெரியவந்தது. இதையடுத்து, நேற்று காலை சங்கீதாவை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த தகவல்கள் வருமாறு: எனது கணவர் பெயர் கார்த்திக். பெயின்டிங் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. என் கணவர் ஒரு குழந்தையே போதும் என்று முடிவெடுத்து விட்டார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை நடத்தும் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் அடிக்கடி தனிமையில் இருந்தோம். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதை அறிந்த கள்ளக்காதலன் என்னிடம், ‘‘கருவை கலைத்துவிடு’’ என்று கூறி, மாத்திரை வாங்கி கொடுத்தார்.

அதை சாப்பிட்டும் கரு கலையவில்லை. இந்நிலையில், கணவர் கார்த்திக் என்னிடம் ‘வயிறு பெரியதாக இருக்கிறதே’ என்று கேட்டார். நான் அதை மறைப்பதற்காக, ‘சாப்பிட்டு வீட்டிலேயே படுத்து தூங்குவதால் உடல் பருமனாக உள்ளது,’ என்று கூறி சமாளித்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை எனக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், பாத்ரூமில் சென்று பெண் குழந்தை பெற்றெடுத்தேன். இது கணவருக்கு தெரியக்கூடாது என்பதற்காக பிறந்த குழந்தையை தூக்கி சென்று ஏரியில் வீசி கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, கெலையான குழந்தை யாருக்கு பிறந்தது என்பதை அறிய டின்ஏ பரிசோதனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். மேலும், கொலை வழக்கு பதிவு செய்து, சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

அக்.03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்