கணவன் மனைவி உறவு பலம் பெற!

திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் ஆயுள்கால உறவு கணவன் மனைவி பந்தம். ஏனென்றால் ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் ஆயுளுக்கும் உடன் இருக்கும் ஒரு உறவு. கணவன் மனைவி உறவு என்பது சண்டையும், சச்சரவுகளும், மனக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும். அவைகள் இல்லாமல் வாழமுடியாது.கணவன் மனைவி உறவுக்குள் பல நேரங்களில் சாதாரண பிரச்னைகள் கூட பெரிதாகி அது விவாகரத்து வரை சென்று விடுகிறது. கணவனும் மனைவியும் இருவருமே சில விஷயங்களை கடைப்பிடித்தால் சண்டை சச்சரவுகள் என்பதே இல்லை என்பதற்கு சில யோசனைகள் இதோ.கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான். அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும். மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது. அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.உங்கள் கணவனை-மனைவியை ஒரு போதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டுப் பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமேதான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சாதனங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும். இது உங்கள் துணையின் தனியுரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும். இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைவிக்கும் ஒரு வித மனச்சோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேகக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தும். உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். பொதுவாக பெண்களுக்கு எத்தனை வயதானாலும் சில ஆண் ரோமியோக்களின் மொபைல் வழி இம்சைகள் இருக்கத்தான் செய்யும். ஒருவேளை அவர்கள் அலுவலக உயரதிகாரிகளாக இருக்கலாம், அல்லது சக பணியாளராக இருக்கலாம். தனக்கு அந்த நபரால் ஆபத்து எனில் பெண்கள் நிச்சயம் தானாகவே கணவரிடம் சொல்லிவிடுவார்கள். அதற்கு முன் நாமே வெறுமனே சமாளிக்க அனுப்பிய குறுஞ்செய்திகளை கணக்கில் கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது ஆபத்து.

உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக் கூடாது. இப்படி அவர்களின் விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.பொதுவாக யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. இந்த பூவுலகில் பிறந்த சிறு புழு பூச்சிகள் கூட அதன் விருப்பப்படி தனது வாழ்க்கையை வாழும் போது கணவன் என்ற போர்வையில் மனைவியையோ அல்லது மனைவி என்கிற போர்வையில் கணவனையோ அடக்கி, கட்டுப்படுத்தி வாழ்வது சரியாகாது. இரு வீட்டாரின் சொந்தங்களுக்கும் சரிசம உரிமைகளும், அன்பும், மரியாதையும் கொடுக்க வேண்டியதும் அவசியம். பெரும்பாலும் இன்னொரு வீட்டிலிருந்து நம்பி வரும் பெண்களை கணவன் வீட்டார் கூடுமானவரை எதையும் திணிக்காமல் அவரவர் சுதந்திரத்துடன் வாழ விட்டாலே பல பிரச்னைகள் தீரும்.
– கவிதாபாலாஜி கணேஷ்

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு