பசியாற்றும் முதல்வர்

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இன்று திகழ்கிறதென்றால், அதற்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்களே முக்கிய காரணமாகும். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்தே மக்கள் நலன் காக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். விடியல் பயண திட்டத்தின் கீழ் பெண்கள், மாற்றுதிறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம் என்னும் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மற்ற மாநிலங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, செயல்படுத்த தொடங்கியுள்ளன.

இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டம், மகளிர் திருமண நிதியுதவி திட்டம், பணியாற்றும் மகளிருக்கு சமூக நலத்துறையின் கீழ் ‘தோழியர் விடுதிகள்’ என இந்த திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு என தீட்டப்படும் நல்ல திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த அரசின் திட்டங்கள் ஏராளம்.

தமிழக முதல்வரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கி, தகைசால் பள்ளிகள் திட்டம், ஊட்டசத்து குறைபாடு இல்லாத மாணவர்களை உருவாக்கும் திட்டம், இல்லம் தேடி கல்வி என பல திட்டங்கள் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டங்களுக்கு எல்லாம் சிகரமாக திகழ்கிறது. படிக்கிற காலத்தில் காலை உணவின்றி மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடைபடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15-9-2022ம் தேதியன்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அத்திட்டத்தில் 1545 அரசு பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற்றனர். மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் வாயிலாக அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த மாட்டார்களா என்கிற ஏக்கம், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் இருந்து வந்தது.

அந்த குறையையும் தீர்க்க இதோ திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் இன்று முதல், அத்திட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வை முன்னெடுக்கிறார். காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இன்று முதல் காலை உணவு திட்டத்தில் 2 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் இனிமேல் தொடக்கப்பள்ளி மாணவர்கள் காலை, மதிய உணவுகள் குறித்த எவ்வித கவலையுமின்றி பள்ளிகளுக்கு சென்று பாடங்களை படிக்கலாம். தொடக்க கல்வியை நாடிவரும் மழலை செல்வங்களுக்கு எழுத்தறிவித்தலோடு, அவர்கள் பசியாற உணவும் தரும் உன்னத ஆட்சி, இந்தியாவிலே தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

Related posts

கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி

சென்னையில் ரூ.600 கோடியில் குடியிருப்பு: பிரிகேட் நிறுவனம் திட்டம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்..!!