சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்துவதா?: நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் சங்கமும், தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவர் குஷ்புவிடம் கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, ‘‘ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது’’ என்று குறிப்பிட்டிருந்தார். சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்துள்ளார். பாஜவினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார் குஷ்பு. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்பு துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பு.

சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா, மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மெழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதை தான் பயன்படுத்தினாராம். இது தான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா, சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்புவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்