மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு ரோபோ அறிமுகம்: முதற்கட்டமாக ஆலந்தூரில் சோதனை

அம்பத்தூர்: கழிவுநீர் கால்வாய்களில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் வகையில், முழுமையாக நீரில் மூழ்கக்கூடிய ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் ஆலந்தூரில் தொடங்கியுள்ளது. சென்னையில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்துவது சட்ட விரோதம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய், பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நவீன ரோபோ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் ரிப்பன் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த எம்.எஸ்.எம்.இ துறையின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தொடக்க நிகழ்வில், கழிவுநீர் கால்வாயை மனிதர்களை வைத்து சுத்தம் செய்தவதை தடுக்கும் வகையில், நவீன ரோபோ பயன்படுத்துவது குறித்து அறிவிக்கப்பட்டது. இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 4 வகையான தானியங்கி ரோபோக்களை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

அவை 90 மி.மீ., முதல் 2,000 மி.மீ., சுற்றளவு கொண்ட துளைகளிலும் நுழையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கூடவே வடிகால்களில் அடைத்துள்ள கசடு மற்றும் குப்பை கழிவுகளை துல்லியமாக மதிப்பிடும் வகையில், இந்த ரோபோக்களில் பாண்டோகிராப் 720பி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வடிகால்களின் இடுக்குகளில் நுழைவதற்கு ஏதுவாக, ‘கிராலர்ஸ்’ எனப்படும் சின்ன வகையான ரோபோக்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கிராலர்கள் 90 மி.மீ., குறுகிய வடிகால்களில் செல்லவும், வண்டல் மண்ணின் ஆழத்தை ஆய்வு செய்யவும் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல், வடிகால்களுக்கு வெளியே நிலைநிறுத்தப்பட்ட சக்கர இயந்திரங்களை பயன்படுத்தி வண்டல் மண்ணை அகற்றும் வகையிலான ரோபோக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. எண்டோ 600 என்ற பெயரிடப்பட்ட இந்த ரோபோவை பரிசோதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இந்த ரோபோக்களானது தடித்த கால்வாய் கசடுகளை கடக்கும் வகையிலும், ஒரு செயல்பாட்டில் 25 கிலோ வரையிலான வண்டல் மண்ணை நீர்வழிகளில் இருந்து அகற்றும் திறன் கொண்டவை.

இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் சமீரன் கூறுகையில், “20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய்களில் மூடி இல்லாததால், தூர்வாருவது கடினமாகிறது. சில சமயங்களில் இந்த வாய்க்கால்களை உடைத்து புனரமைக்க வேண்டி இருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட நவீன வடிகால்களில், ஒவ்வொரு 2.5 மீட்டருக்கும் ஒரு மேன்ஹோல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் பராமரிப்பு பணிகள் எளிது. இந்த நீரில் மூழ்கக்கூடிய ரோபோக்கள், பழைய வடிகால்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த தொழில்நுட்பத்தை முதல்கட்டமாக ஆலந்தூரில் சோதனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதோடு, நகரின் வடிகால்களை சரியாக அமைப்பதற்கும், முன்பு காணாமல் போன இணைப்புகள் மற்றும் தவறான சாய்வுகளை அடையாளம் காணவும் சரியான வரைபடத்தை மாநகராட்சி உருவாக்கி வருகிறது.

இந்த பணிக்கு ‘பேர்ட்ஸ்கேல்’ நிறுவனத்துடன் இணைந்துள்ள சென்னை மாநகராட்சி, ட்ரோன்களைப் பயன்படுத்தி சாய்வு சிக்கல்களை கண்டறிந்து, வடிகால்களின் நீரோட்ட வடிவங்களைத் திட்டமிடுவதற்கு ஒரு சோதனை ஆய்வு செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து, நீரியல் ஆய்வின் மூலம், வெள்ளம் பாதித்த 600 பகுதிகளில் நீர் தேங்குவதை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழக அரசின் முன்முயற்சியான இந்த ஸ்டார்ட்அப் நிகழ்வு, சிறிய நிறுவனங்களுக்கு திட்ட வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேபோன்ற ஒத்துழைப்பு சமீபத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு மாநகராட்சி கழிப்பறைகளின் நேரடி கண்காணிப்பை மேம்படுத்த உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 14 நிறுவனங்கள் தங்களது புதுமையான மாடல்களை காட்சிப்படுத்தினர். அதில், மற்றொரு நிறுவனமானது, வடசென்னையில் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து ஆய்வு செய்வதற்காக நேரடி-மேப்பிங் திட்டத்தை பைலட் செய்ய அனுமதி பெற்றுள்ளது,’’ என்றனர்.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது