Saturday, October 5, 2024
Home » ஒற்றுமை வளர்க்கும் ஓணம்! ஏன்… எப்படி கொண்டாடப்படுகிறது..?

ஒற்றுமை வளர்க்கும் ஓணம்! ஏன்… எப்படி கொண்டாடப்படுகிறது..?

by Kalaivani Saravanan

29.8.2023 – ஓணம் பண்டிகை

உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.

ஓணத்தின் சிறப்பு

கேரள மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும், ‘ஓணம் பண்டிகை’ ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்ங மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள், தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம்பெற்று தங்களைத் தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் தலையாயச் சிறப்பு ஆகும்.

ஓராயிரம் ஆண்டுகால பண்டிகை!

கேரளாவில் பருவமழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும். கேரளாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை, ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பர். ஓணம், ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை. இந்த வரலாற்றுச் செய்தி, கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில் விவரமாக பொறிக்கப்பட்டுள்ளது.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டின் முன்பு, பெண்கள் 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்று அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.

நான்காம் நாளான விசாகத்தில், அறுசுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பர்யமான படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஆறாம் நாள் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். திருவோண நாளான 10-ம் நாள் நடைபெறும் ஓணம் கொண்டாட்டத்துடன் இந்த விழா முடிவடைகிறது.

‘அத்தப்பூ’ என்ற பூக்கோலம்!

​ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமே, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் ஒவ்வோர் வீட்டு வாசலிலும் போடப்படும் ‘அத்தப்பூ’ என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில், ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால், இந்தக் காலத்தில் வரும் ஓணத் திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர்.

முதல் நாள் ஒரேவகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து 10-ம் நாள், பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். 10-ம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

64 உணவு வகைகள்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ‘ஓண சாத்யா’ என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசிமாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இந்த உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்காக ‘இஞ்சிக்கறி’, ‘இஞ்சிப்புளி’ ஆகியவற்றை உணவுடன் எடுத்துக்கொள்வர்.

ஆண், பெண் ஆடும் நடனங்கள்!

ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பம்சம், ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனம் ஆகும். இந்த விழா, திருச்சூரில் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. தொந்தியை பெரிய அளவில் உருவாக்கி வைத்திருக்கும் ஆண்மகன்களுக்கு இந்த விழாவில் கிராக்கி உண்டு. இந்த விழாவைக் காண வெளிநாட்டினரும் வருகிறார்கள். புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன், மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கிவைக்கப்பட்டதாகும்.

கறுப்பு, மஞ்சள், சிவப்பு வர்ணம் பூசி, இசை ஒலிக்கேற்ப ஒருவித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர். ஓணம் பண்டிகைக் காலங்களில் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம், ‘கைகொட்டுக்களி.’ கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.

யானை அலங்காரம்!

ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழா. 10-ம் நாளான திருவோணத்தன்று, யானைகளை விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும். கயிறு இழுத்தல், களரி, பாரம்பர்ய நடனப் போட்டிகள் என பண்டிகையின் 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுகளில் கலந்துகொண்டு குதூகலம் அடைவர்.

ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது. அந்த வரலாற்றுச் செய்திகளைச் சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் தமிழகத்தில் வாழும் கேரள மக்களோடு சேர்ந்து இப்போதும் ஓணம் பண்டிகையைத் தமிழக மக்களும் கொண்டாடுகிறார்கள்.

ஒற்றுமை வளர்க்கும் ஓணம் கொண்டாடுவோம்!

ஓணம் வரலாறு…​

முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்துகொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறுபிறப்பில் மகாபலி என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சிபுரிந்தது. மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் வாரிசான மகாபலி மன்னனின் வளர்ச்சியைக் கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுரகுலம் ஜெயிக்கவே, தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர்.

திருமாலை மகனாக அடைய வேண்டி, காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். அசுர குலத்தினனாக இருந்தபோதிலும், தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன், மகாபலியின் அரண்மனைக்குச் சென்று, தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது கடவுள் அவதாரமான வாமனன் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார், தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார். இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி, மன்னன் குரு சொன்னதை கேளாமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக்கொண்டார்.

உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று கூற, மகாபலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறு கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த, அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான். அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம், தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார். அப்படி தன் மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவும் மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு, அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த திருநாளில், கேரள மக்களின் மகிழ்ச்சியை காணவரும் மகாபலி மன்னர் ஆசிர்வாதங்களையும், செல்வங்களையும் வாரி வழங்குவர் என்பது ஐதீகம். ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோணத் திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப் படுகிறது.

ஓணம் சத்ய விருந்தில் என்ன சிறப்பு….?

ஓணம் சத்ய விருந்து, திருவோண நாள் அன்று கேரளா மக்களால் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அன்போடு பரிமாறப்படுகிறது. கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன், காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கறி ஆகியவை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் (அப்பளம்) வைத்து உண்ணுவார்கள்.

பின்னர், சாம்பார் சேர்த்து உண்ட பின், பிரதமன் எனப்படும் பாயசத்தை சுவைத்துவிட்டு, புளிசேரி கூட்டி, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறும், மனமும் நிறைந்தே விடும்.

​மகிழ்ச்சி பொங்கும் பாரம்பரிய விளையாட்டுகள்

மாலைப் பொழுதுகளில் பெண்கள் ஓணம் சேலை கட்டிக் கொண்டு, கோலத்தை சுற்றி கும்மி கொட்டியும், வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடி மகிழ்வர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு, மீண்டும் பாதாள லோகம் செல்கின்றார் என்பது வரலாறு.

புதுமணத் தம்பதிகள் இந்த நாளை, தலைத் தீபாவளி போன்று `தலை ஓணம்’ என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. ஜாதி, மத, பேதம் கடந்து கொண்டாடப்படும் இந்நன்னாளில், நாமும் நம் வாழ்த்துகளை கேரளா மக்களுக்கு தெரிவிப்போமே!

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

You may also like

Leave a Comment

6 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi