எப்படி சாத்தியமாகும்?

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான குழுவின் பரிந்துரைகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது முக்கிய விவாத பொருளாக மாறியிருக்கிறது. மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதைத்தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நிதி மற்றும் நிர்வாக சுமையை கணிசமாக குறைக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுவது பற்றி இக்குழுவும், ஒன்றிய அரசும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதை, மசோதாவாக தாக்கல் செய்து, இரு அவைகளிலும் நிறைவேற்ற ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த பிடிவாத போக்கிற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நடைமுறையை அமல்படுத்தும்போது, பல்வேறு மாநிலங்களில் காலாவதியாகாத அரசுகள் இருக்கும். அவற்றை என்ன செய்யப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது. மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதும், புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

அதை எப்படி கையாளப்போகிறார்கள்? என்ற குழப்பமும் கூடவே எழுகிறது. இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது மக்களுக்காக செய்யப்படுவது இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறைந்தபட்சம் 5 பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படும். ஒன்று – பாராளுமன்ற அவைகளின் காலம் தொடர்பான பிரிவு 83.

இரண்டாவது – குடியரசு தலைவரால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85. மூன்றாவது – மாநிலத்தின் பதவிக்காலம் தொடர்பான பிரிவு 172. நான்காவது – மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174. ஐந்தாவது – மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 356. இந்த 5 மாற்றங்களை கொண்டுவந்தால் மட்டுமே இது ஓரளவு சாத்தியமாகும். அத்துடன் முடியவில்லை. இன்னும் கூடவே சிக்கல்கள் எழுகிறது.

அதாவது, தேர்தல் முடிந்த பின் மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன ஆகும்? தேர்தல் முடிந்த பின் ஒன்றிய அரசு கவிழ்ந்தால் என்ன ஆகும்? ஒரு சில மாநிலங்களில் மட்டும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன ஆகும்? இப்போது சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி நீட்டிக்கப்படுமா, கவிழ்க்கப்படுமா? இப்படி அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கும் விடை காண வேண்டியது அவசியம். திருத்தம் – என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டத்தில் கை வைப்பது, ஒட்டுமொத்த மாநில உரிமையை பறிப்பதாகும். இதை, அந்தந்த மாநில மக்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்?

ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசுகளின் உரிமையை பறிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளன. எனவே நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது சாத்தியமாகுமா? மக்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ள முடியுமா? எதிர்க்கட்சிகளை மதிக்காமல், அவசர கோலத்தில் அமல்படுத்த முடியுமா? என்பதை தனி மெஜாரிட்டி இல்லாமல், ஆட்சி நடத்தும் ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும். தேன்கூட்டில் கை வைத்த கதை ஆகி விடக்கூடாது.

Related posts

நெருக்கடி நிலையை அமல்படுத்தியவர்கள் பாஜவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை: எச்.ராஜா பேட்டி

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் ராமநாதபுரம், அரக்கோணத்தில் இன்றுமுதல் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னையில் அறிவியல் கண்காட்சி: 24ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது