தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி நிகழ்வின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களிடம் யாருக்கும் மொத்தமாக சரக்குகள் கொடுக்கக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், கள்ளச்சந்தை வியாபாரிகளும், பாரில் பணிபுரிபவர்களும் ஒன்று, இரண்டாக வாங்கி மொத்தமாக சேர்த்து, பின்னர், கடையை அடைத்த பின்னர் விற்பனை செய்கிறார்கள்.

விதிமீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தனிநபர் தனது சுய லாபத்திற்காக சில்லரையாக வாங்கி சேர்த்து டாஸ்மாக் கடை மூடியிருக்கும் நேரத்தில் விற்றால் அதற்கு டாஸ்மாக் ஊழியர் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. ஒரு நபருக்கு எத்தனை பாட்டில்கள் கொடுக்க வேண்டும் என்று விற்பனை விதிகள் எதுவும் இதுவரை எழுத்துப் பூர்வமாக இல்லை.

எனவே, கடைகளில் முறைகேடு இருந்தாலோ, அல்லது கடை பணி நேரத்தில் மொத்தமாக சரக்கு கொடுக்கும்போது பிடிபட்டாலோ தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆட்சேபணை இல்லை. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க, தனிநபர் ஒருவருக்கு எத்தனை மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும். அதற்கான விதிமுறையை நிர்வாகம் உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு