எத்தனை நாளில் ஓதிமுடிக்க வேண்டும்?

இறைத்தூதரின் இனிய தோழர்களில் ஒருவர் அப்துல் லாஹ் பின் அம்ர் அவர்கள். இவர் குர்ஆன் வேதத்தை ஓதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். வேகமாகவும் ஓதக் கூடியவர். எந்த அளவுக்கெனில் ஒரே இரவில் குர்ஆனை முழுமையாக ஓதி முடித்துவிடுவார். இது குறித்து அப்துல்லாஹ் பின் அம்ர் கூறுகிறார்:

“நான் குர்ஆனை மனனமிட்டு ஒரே இரவில் முழுமையாக ஓதினேன். இதையறிந்த இறைத்தூதர் அவர்கள், “உன்னுடைய வாழ்நாள் நீண்டு உனக்குக் குர்ஆன் ஓதுவதில் சோர்வு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். மாதத்திற்கு ஒரு முறை குர்ஆனை ஓதி முடிப்பாயாக” என்று அறிவுறுத்தினார்.

உடனே நான், “இறைத்தூதர் அவர்களே… எனக்கு இளமையும் வலிமையும் உள்ளன. இன்னும் அதிகமாக ஓதிப் பயனடைய என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டேன்.

“சரி, அப்படியானால் பத்து நாட்களில் குர்ஆனை ஓதி முடிப்பாயாக” என்றார் நபிகளார்.

மீண்டும் நான், “இறைத்தூதர் அவர்களே… நான் இளைஞன். வலிமை உடையவன். இன்னும் அதிகமாக ஓத என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டேன்.

“சரி, அப்படியானால் ஏழு நாட்களில் குர்ஆனை ஓதி முடிப்பாயாக” என்றார்.

நான் இன்னும் அதிகமாக ஓத அனுமதி கேட்டேன். ஆனால் ஏழு நாட்களைவிடக் குறைவாக ஓதி முடிக்க நபிகளார் அனுமதி தர மறுத்துவிட்டார்.”

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இறைத்தூதர் கூறினார்: “யார் மூன்றுக்கும் குறைவான நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிக்கிறாரோ அவர் வேதத்தை விளங்கிக் கொண்டவர் ஆகமாட்டார்.”

இறைவேதத்தைப் பொருள் அறியாமலும் விளங்கிக் கொள்ளாமலும் ஓதினாலும்கூட நன்மை உண்டு என்றாலும் பொருள் அறிந்து விளங்கி ஓதுவதே பயன் தரும்.

அதிவிரைவு தொடர்வண்டியின் வேகத்தில் வேதத்தை ஓதுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதைத்தான் நபிகளாரின். இந்தப் பொன்மொழிகள் அறிவுறுத்துகின்றன. பொருள் அறிந்தும் சிந்தித்தும் ஓதுவதற்கு குறைந்தது மூன்றிலிருந்து ஏழு நாட்களாவது வேண்டும். அதற்கும் குறைவான நாட்களில் ஒருவர் வேதத்தை ஓதி முடிக்கிறார் எனில் சிந்திக்காமல் வெறுமனே ஓதிக்கொண்டு போகிறார் என்பதுதான் பொருள். தூய மறையாம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக, அழகாக, சிந்தித்துப் பார்த்து, செயல்படுத்தும் எண்ணத்துடன் ஓதினால் இறையருள் நிச்சயமாக நம்மீது பொழியும்.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

‘‘பெரும் பாக்கியங்கள் நிறைந்த குர்ஆனை நாம்தான் உம்மீது அருளினோம். மக்கள் இதன் வசனங்களை சிந்திக்க வேண்டும், அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக.’’
(குர்ஆன் 38:29)

Related posts

புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்

தேரழுந்தூர் தேவாதிராஜன்

பாரளந்த பெருமானின் புகழ்பாடும் புரட்டாசி!